சென்னை: தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு திராவிட இயக்கங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. திமுக மற்றும் அதிமுக மாறி மாறி ஆட்சியில் இருந்தன. இரு பெரும் திராவிட கட்சிகளை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. விஜயை தொடர்ந்து நடிகர் தனுஷ் அரசியலில் இறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் அரசியல் குறித்து தவெக அமைச்சர்களே விமர்சிக்க தொடங்கியுள்ளனர். தனுஷை பார்த்து தவெகவுக்கு பயம் வந்துவிட்டதாக சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னையில் திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அதிகாரிகள் மழையில் காத்துகிடந்தனர். அமைச்சர் ரமேஷ் காருக்குள் அமர்ந்து யாரிடமோ வாட்ஸ் அப்பில் போன் பேசி கொண்டிருக்கிறார். ஐஏஎஸ், டிஆர்ஓ, இணை ஆணையர்கள் எல்லாம் கைக்கட்டி நின்று கொண்டிருக்கிறார்கள். இது சரியாக அணுகுமுறை இல்லை. யாரிடம் பேசினார் என்பதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்.
சென்னையில் கனமழை பெய்து வருகிறது. நாங்கள் மழைநீர் தேங்கியதை வாட்ஸ் அப்பில் வீடியோவாக பதிவு செய்திருந்தோம். இதற்கு தவெகவினர் கோபப்பட்டு பயனில்லை. திமுக ஆட்சியில் 2024 ஆம் ஆண்டும் மழைநீர் தேங்கியதாக சொல்கிறார்கள். தண்ணீர் தேங்கியிருந்தால் வீடியோ வெளியிட வேண்டியது தானே. நாங்கள் மழைநீர் கட்டமைப்பை பலப்படுத்தியதால் தான், கடந்த 5 ஆண்டுகளில் சென்னையில் மழைநீர் தேக்கம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையை மொத்தமாக புதுப்பித்துள்ளோம். அறநிலைத்துறை அலுவலகமே மோசமாக இருந்தது. திமுக ஆட்சியில் எங்கள் தலைவர் ரூ. 10.5 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்தார். உண்மைக்கு மாறாக பேசுவது, அரசியலில் கோல்மூட்டுவதற்காக பேசுவது திமுகவுக்கு வழக்கம் கிடையாது. எங்கள் ஆட்சியில் தண்ணீர் தேங்கி ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதை ஆளுங்கட்சியினர் வெளியிட வேண்டும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானால் அரசியலுக்கு வரலாம். விஜய் அரசியலுக்கு வந்தபோது நாங்கள் அவரைப் பற்றியோ, தவெக பற்றியோ எதுவும் பேசவில்லை. காரணம் எங்களுக்கு பயமில்லை. நடிகர் தனுஷ் அரசியலில் நுழையவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் எங்களை வெற்றி பெற முடியாது என்றெல்லாம் தவெகவினர் கூறுகிறார்கள். தவெகவினர் எப்போது தனுஷ் அரசியல் வருகை பற்றி பேசுகிறார்களோ பயம் வந்துவிட்டது என்று தானே அர்த்தம்" என்றார்.தனுஷால் பயந்த தவெக