உணவுப் படி, கழிப்பறை வசதி.. தவெக அரசு ஏற்றுக்கொண்ட தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் என்னென்ன?

  • சென்னை: தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வந்த நிலையில், இன்று அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அரசு ஏற்றுக் கொண்ட தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளின் விவரம் இங்கே..

    Advertisement

    பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு, வார விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த இரண்டு வாரங்களாகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வந்தனர். இதையடுத்து, சென்னை ரிப்பன் மாளிகையில் தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    Advertisement

    இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அரசுத் தரப்பில் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர் நிர்மல் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அவற்றில் பெரும்பாலானவற்றை உடனடியாக நிறைவேற்ற ஒப்புக்கொண்டனர்.

    அரசின் இந்த சாதகமான முடிவைத் தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்கள் தங்களது போராட்டத்தைத் தற்காலிகமாகத் தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளனர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உழைப்போர் உரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாரதி, "அமைச்சர்களுடன் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைச்சர்கள் முதல்வரை நிச்சயம் சந்திக்க வைக்கிறோம் என்று உறுதியளித்துள்ளனர். அக்டோபர் 3 ந் தேதி நல்ல செய்தி வரும் என்று அமைச்சர்கள் சொன்னார்கள்" எனத் தெரிவித்தார்.

    Advertisement

    மேலும் பேசிய அவர், அமைச்சர்கள் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளைப் பட்டியலிட்டார்.

    1. உணவுப் படியாக ஒரு நாளைக்கு ரூ.50-ஐ அடுத்த மாதம் முதல் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

    2. 197 வார்டுகளில் கழிப்பறை வசதி செய்து கொடுக்கிறோம். மீதம் உள்ள வார்டுகளில் இடம் கண்டறிந்து அமைத்து கொடுப்போம் என உறுதி அளித்துள்ளனர்.

    3. கடந்த காலங்களில், போராட்டங்களில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவதாக ஒப்புதல் கொடுத்துள்ளனர்.

    4. 4, 5, 7, 8 ஆகிய மண்டலங்களில் பழைய வாகனங்கள் தான் உள்ளன. எனவே புதிதாக 300 வாகனங்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்கள்.

    Advertisement

    5. பணீயில் இறந்தவர்கள் 7 பேருக்கு இழப்பீடு தொகை கேட்டுள்ளோம். நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

    6. மழைக் காலத்துக்குள் ரெயின் கோட் உள்ளிட்வற்றை கொடுப்பதாக கூறியுள்ளனர்.

    7. வாரத்திற்கு ஒரு முறை கை கிளவுஸ் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

    8. 4 மாதங்களுக்கு ஒருமுறை மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனை நடத்தப்படும்.

    9. 4, 7, 8 மண்டலங்களில் சங்க அலுவலகங்கள் ஏற்பாடு செய்து தரப்படும்.

    10. தூய்மை பணியாளர்கள் முதல்வர் விஜய்யை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

    மகப்பேறு விடுப்பு, மாதவிடாய் விடுப்பு போன்றவற்றை அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் பேசப்படும். அக்டோபர் 3 ஆம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Sanitation workers protest has been called off following talks held with ministers today. Here are the details of the demands accepted by the government.