வீரமணி விளாசிய குதிரை பேரம்! ஆளுநர் கையிலெடுக்கும் சட்டப்பிரிவு 167.. சந்தையாகிறதா சட்டமன்றம்?

  • சென்னை: தவெக மீது குதிரை பேரப் புகார்களை எதிர்க்கட்சிகள் சுமத்தி வருகின்றன.. இதனால் ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் இந்திய அரசியல் சாசனப் பிரிவு 167-ன் கீழ் மாநில அரசிடம் அதிரடியாக விளக்கம் கேட்கத் தயாராகி வருவதாக செய்திகளும் கசிந்தவாறு உள்ளன.. இப்படிப்பட்ட சூழலில், தமிழ்நாட்டில் அரேபியப் பாணி குதிரைச் சந்தை அரங்கேறி வருவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முன்வைத்துள்ள விமர்சனம், அரசியல் நெருக்கடியை மேலும் சூடாக்கியுள்ளது...!!

    Advertisement

    தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்தே ஏகப்பட்ட ட்விஸ்ட்கள் நடந்து கொண்டிருக்கின்றன.. அதாவது கோட்டை அதிகாரத்தை விட, கட்சித் தாவல் விவகாரங்கள் தான் ஹாட் டாபிக்காக மாறியுள்ளன.

    Advertisement

    அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் திடீரென பதவிகளை துறந்துவிட்டு தவெகவில் தஞ்சமடைந்தது, அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தோற்றுவித்தது என சொல்லலாம்.. ஆனால் இது ஒன்றும் கேஷூவலாக நடந்த இணைப்பு இல்லை என்பதே பலரது கருத்தாக உள்ளது..

    தமிழகத்தில் குதிரை பேர அரசியல்

    எனவேதான், இது ஜனநாயக பூர்வமான இணைவா அல்லது அதிகார பலத்தால் நடத்தப்பட்ட ஆள் பிடிப்பு அரசியலா என்ற விவாதம் வெடித்து கிளம்பியுள்ளது.. இது ஆளுநர் மாளிகை வரையும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. முதலமைச்சர் விஜய் ஆட்சி அமைக்க எப்போது உரிமை கோரினாரோ, அப்போதே எம்எல்ஏக்களை தவெக அரசு தன்பக்கம் வளைத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    Advertisement

    இதற்கு குதிரை பேரம் என்ற பெயரையும் வைத்து, தன் கட்சி எம்எல்ஏவை தவெக இழுத்துக்கொண்டுவிட்டது என்ற குற்றச்சாட்டை முதன்முதலில் துவக்கியவர் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்தான்..

    இதற்கு பிறகு திமுக, அதிமுக என 2 கட்சிகளும் ஒரே குரலில் இதே குதிரை பேர குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன.. இந்த விவகாரம் எல்லை மீறுவதாகக் கூறி, திமுக, அதிமுக, மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கடந்த 4-ம் தேதி ஆளுநரை நேரில் சந்தித்து, இந்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரிக்கை விடுத்தார்கள்.

    ஆளுநரின் 167 சட்டப்பிரிவு

    Advertisement

    இதன் விளைவாக, ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் தற்போதைய ஆளும் தரப்பிற்கு சட்ட ரீதியான செக் வைக்க தயாராகிவிட்டதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் கசிகின்றன. இந்திய அரசியல் சாசனத்தின் 167-வது பிரிவு மாநில அரசிடம் நிர்வாக விபரங்களைக் கேட்க ஆளுநருக்கு முழு உரிமை அளிக்கிறது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, எம்எல்ஏ-க்களின் அடுத்தடுத்த ராஜினாமாக்கள் மற்றும் கட்சி மாற்றங்களின் பின்னணி குறித்து முதலமைச்சரிடம் விளக்கம் கேட்க ஆளுநர் உத்தேசித்துள்ளாராம்..

    அப்படி விளக்கம் கேட்டால், அது தவெக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்துமா அல்லது ஆளுநர்-அரசு மோதலாக வெடிக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், தவெக அரசை, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் பாணியில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

    Advertisement

    கி.வீரமணி விமர்சிக்கும் குதிரைச் சந்தை

    அந்தவகையில், மூத்த தலைவர் கி.வீரமணியும் விமர்சித்துள்ளார்.. விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி, "முன்பெல்லாம் தமிழ்நாட்டில் ஆட்டுச்சந்தை, மாட்டுச்சந்தை இருக்கும். இப்போதுதான் அண்மையில் குதிரைச்சந்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

    குதிரைச் சந்தை எங்கோ நடக்கவேண்டியது, அரேபியா போன்ற இடங்களில் நடக்கும். ஆனால் இப்போது எல்லோரும் பார்க்கக்கூடிய அளவிற்கு, ஓட்டுப் போட்ட மக்களை ஏமாற்றக்கூடிய அளவிற்கு தமிழ்நாட்டில் புது வளர்ச்சி வந்துள்ளது. புதிய சந்தைக்கு நல்ல விலை போகிறது. இப்போது மனிதர்களுக்கே அதிகவிலை. மக்களிடம் ஓட்டு வாங்கிய மனிதர்களுக்கு இன்னும் அதிக விலை” என கருத்து தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அரசியல் தலைவர்களின் கருத்துக்கள், விமர்சனங்களையும் தாண்டி, ஆளுநரின் விளக்கம் கேட்கும் நோட்டீஸுக்கு முதலமைச்சர் விஜய் தரப்பு அளிக்கப்போகும் சட்டப்பூர்வ பதிலும், இந்த குதிரை பேரப் புகார்களுக்கு நீதிமன்றம் அல்லது மக்கள் மன்றம் தரப்போகும் தீர்ப்பும் தான் தமிழக அரசியலின் அடுத்தகட்ட நகர்வை தீர்மானிக்கும்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

    English Summary

    The TVK government is under scrutiny following serious allegations of poaching MLAs from opposition parties. With DMK, AIADMK, and BJP leaders approaching the Governor, Rajasthan Arlekar is now preparing to seek an official explanation under Article 167, potentially escalating the political conflict surrounding this controversial horse-trading situation in Tamil Nadu.