சென்னை: "தவெக அரசு 6 மாதங்களுக்கு மேல் தாங்காது, வரும் ஜனவரிக்குள் நீதிமன்ற வழக்குகளாலேயே ஆட்சியின் நிலைமை முடிவுக்கு வரக்கூடும் என்றெல்லாம் தவெகவை சேர்ந்தவர்களே அஞ்சுகின்றனர். திருமாவளவன், காங்கிரஸ், முஸ்லிம் லீக் தலைவர்கள் எவ்வளவு ஆதரவளித்தாலும், இது மறைமுகமாக பாஜகவின் நிழல் அதிகாரத்தில் இயங்கும் அரசு தான் என்பது விரைவில் வெளிப்பட்டுவிடும்" என்று அரசியல் விமர்சகரும், மூத்த எழுத்தாளருமான ராஜகம்பீரன் ஆருடம் தெரிவித்துள்ளார்.
News focus tamil சேனலுக்கு பேட்டி தந்துள்ள ராஜகம்பீரன்,"ஆட்சியை நீடிக்க வேண்டும் என்று தவெக விரும்புகிறது.. ஆனால் அதிமுக வழியாக ஆட்சியில் நீடிக்க விரும்புகிறார்கள்..
அதிமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுக்க தவெக தீவிரமாக முயற்சிக்கிறது.. இதற்காக ராஜினாமா செய்யக்கூடிய எம்எல்ஏக்களுக்கு முதற்கட்டமாக ரூ. 25 கோடியும், தேர்தல் செலவுகளுக்காக ரூ. 35 கோடியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தவெக கொள்கை அரசியலை முற்றிலும் விடுத்து, குதிரை பேர அரசியலை மட்டுமே நம்பி செயல்படுகிறது. மதச்சார்பற்ற, சமூக நீதி என்றெல்லாம் கூட பயன்படுத்துவதற்கு அவர்கள் தயக்கம் காட்டுகின்றனர். மதச்சார்பற்ற என்ற வார்த்தையைகூட திருமாவளவன் சொல்லித்தான், தவெக சொல்கிறது. பெரியார் பிறந்தநாள் பேரணி மற்றும் நீட் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது போன்ற போலீஸ் நடவடிக்கைகள், முழுக்க முழுக்க அப்படியே பாஜகவின் பிளான்தானே? பாஜகவின் திட்டமிடுதலின், வழிகாட்டுதலின் அடிப்படையில் தான் இந்த அரசு செயல்படுகிறது என்பதற்கு இதெல்லாம் நடைமுறை சாட்சி. தங்களுக்கு இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், முஸ்லிம் லீக் போன்ற தோழமைக் கட்சிகளின் ஆதரவு தேவையில்லை என்ற எண்ணத்திலேயே தவெக இயங்குகிறது. இதில், காங்கிரஸ் தேவையில்லை என்று தவெக ஓபனாக சொல்லவில்லை.. பிரதமர் வேட்பாளர் விஜய் என்று நாசூக்காக தவெக சொல்வதை காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு காலம் இந்த வண்டி ஓடும்? இடைத்தேர்தல் மற்றும் குதிரை பேரத்தின் மூலமாகவே ஆட்சியை நீட்டிக்க அவர்கள் நினைக்கிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் கணக்கீடு காரணமாக நாடாளுமன்றத் தேர்தல் வரை பாஜக இந்த ஆட்சியை நீடிக்க அனுமதிக்கலாம் என்ற கருத்து ஒருபுறம் இருந்தாலும், ஜனவரி மாதத்திற்குள்ளாகவே நீதிமன்ற வழக்குகளின் வாயிலாக இந்த ஆட்சியின் நிலைமை கேள்விக்குறியாகிவிடும்.. இந்த அரசு 6 மாதங்களுக்கு மேல் தாங்காது, வரும் ஜனவரிக்குள் நீதிமன்ற வழக்குகளாலேயே ஆட்சியின் நிலைமை முடிவுக்கு வரக்கூடும் என்றெல்லாம் தவெகவை சேர்ந்தவர்களே அஞ்சுகின்றனர். திருமாவளவன், காங்கிரஸ், முஸ்லிம் லீக் தலைவர்கள் எவ்வளவு ஆதரவளித்தாலும், இது மறைமுகமாக பாஜகவின் நிழல் அதிகாரத்தில் இயங்கும் அரசு தான் என்பது விரைவில் வெளிப்பட்டுவிடும். விஜய் தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவராக வைத்திருப்பதாக சொன்னாலும், அவரது ஆட்சி நிர்வாகமும் செயல்பாடுகளும் பெரியார் வழியில் செல்லாமல், மோடியின் வழியிலேயே செல்கின்றன.. சட்டமன்றத்தில் காரசாரமாக விவாதிக்க வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்து எதுவும் விவாதிக்காமல், கூட்டத் தொடரின் கடைசி நாளில், தனியார் பல்கலைக்கழக மசோதாவை நிறைவேற்றிவிட்டார்கள். 12 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் ஒருவர் கூட பல்கலைக்கழகம் தொடங்கலாம் என்று சொன்னால், கல்லூரிகள் வைத்திருக்கும் அனைவரும் தங்களை பல்கலைக்கழகம் என்று சொல்லத் தொடங்குவார்கள்... இதன் மூலம் பாடத்திட்டம், கட்டணம் என அனைத்தும் அவர்களின் சுய கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும்.. இதனால் கல்வி என்பது மீண்டும் மக்களுக்கு எட்டாக்கனியாக மாறிவிடும். தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்குவது என்பது கார்ப்பரேட்களின் செயல்திட்டம். இந்த அரசு கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமான ஓர் அரசாகவே செயல்படுகிறது.. "கடவுள் மறுப்பைத் தவிர பெரியாரின் அனைத்துக் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டேன்" என்று விஜய் சொல்வது முற்றிலும் வேடிக்கையானது.. தமிழ்நாட்டிற்கு வழிகாட்டி தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி தான்; ஆனால் தவெகவின் பெரியார் யார் என்றால் அது "ரத்தன் பண்டிட் வெற்றிவேல்" தான். விஜய் தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருப்பதாக சொன்னாலும், அவரது நடைமுறை அரசியல் செயல்பாடுகளும் ஆட்சி நிர்வாகமும் பெரியாரின் வழியில் செல்லாமல், நரேந்திர மோடியின் வழியிலேயே செல்கின்றன. பெரியாருக்கும் நரேந்திர மோடிக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் என்பதால், இதில் "பெரியார் யார், மோடி யார்?" என்பதில் விஜய்க்கு ஏதாவது குழப்பம் ஏற்பட்டுவிட்டதா தெரியவில்லை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.தவெக குதிரை பேர அரசியல்
எவ்வளவு காலம் இந்த வண்டி ஓடும்
ஜனவரிக்குள் முடிந்துவிடும்
கார்ப்பரேட் அரசு
மோடி, பெரியார்