விஜய் தலைமையில் அசெம்பிள் ஆகும் அமைச்சர்கள்.. 3 மாதங்களுக்கு பிறகு தவெக அரசின் கேபினட் கூட்டம்!

  • சென்னை: தவெக அரசின் 3-வது அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நாளை (அக்டோபர் 29) நடைபெற உள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்சனை, விலைவாசி உயர்வு, மாநிலத்தில் முக்கிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்தது. தவெக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் சென்னையில் கடந்த ஜூன் 5 ஆம் தேதி நடைபெற்றது. அதில் துறைவாரியாக 436 தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    Advertisement

    அதைத்தொடர்ந்து 2-வது அமைச்சரவை கூட்டம் ஜூலை 16 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பட்ஜெட் தாக்கல், அமைச்சர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதையடுத்து, சட்டப்பேரவையில் பொது மற்றும் வேளாண் பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டு, துறை சார்ந்த மானியக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டன.

    மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தனித்தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெற்றது. இந்நிலையில் தவெக அரசின் 3-வது அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நாளை (அக். 29) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

    முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் வடகிழக்குப் பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மின்தடை, கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்து அமைச்சர்களிடம் முதல்வர் விஜய் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    இதுதவிர நிர்வாக ரீதியாக முக்கிய முடிவுகள், புதிய தொழில் முதலீடுகள், முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இதுதொடர்பாக அறிவிக்கப்படும்.

    அதேபோல், மாநிலத்தின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ஒவ்வொரு துறையும் எட்ட வேண்டிய இலக்குகள், எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டிய தொலை நோக்குத் திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு தொடர் எதிர்ப்பு வருவதால் அதுகுறித்து முதல்வர் விஜய் ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    தமிழகத்தில் தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் உட்பட சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றன. இதனால் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    English Summary

    The third cabinet meeting of the TVK government, chaired by Chief Minister Joseph Vijay, is set to take place tomorrow (Oct 29) at the Secretariat.