சென்னை: சுலபமாக வந்திருக்க வேண்டிய முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் நழுவியதை தமிழகத்தின் தவெக அரசு கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஹூண்டாய் மற்றும் கியா ஆகிய நிறுவனங்கள் தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிற நிலையிலும், கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு ஆந்திராவிடம் பறிகொடுத்ததற்கு த வெ க அரசு வெட்கப்பட வேண்டும் என்று பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "தமிழகத்தில் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்க ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் தென் கொரியா விநியோகஸ்தர்களான ஹ்வாஷின், சியோயான் மற்றும் இவாமெட் ஆகிய நிறுவனங்களுடன் முந்தைய திமுக அரசு பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், தற்போது இந்த மூன்று நிறுவனங்களும் ஆந்திரப் பிரதேசம் அனந்தபுரத்தில் இதே தொழிற்சாலைகளை தொடங்க ஆந்திர அரசுடன் மொத்தம் ₹1,614 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. (இது 1,418 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது). ஆந்திரப் பிரதேச தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் அவர்கள், ஜூலை 2026-ல் தென்கொரியா, சியோலில் ஹூண்டாய்-கியா விநியோகச் சங்கிலி நிறுவனங்களுடன் நடத்திய வட்டமேசை மாநாட்டையடுத்து, ஆந்திரப் பிரதேசப் பொருளாதார மேம்பாட்டு வாரியம் மேற்கொண்ட தொடர்ச்சியான பின்தொடர் நடவடிக்கைகளால் இத்திட்டங்களைப் ஆந்திர மாநிலத்திற்கு பெற்றுத் தந்தன. இந்த நிறுவனங்களின் மனமாற்றம் குறித்த கேள்விகளுக்கு தமிழக அரசின் ஒருங்கிணைப்பு முகமையான 'கைடன்ஸ்' பதிலளிக்கவில்லை. விரைவாகவும், உயர் மட்டத்திலான தொடர்புகளை மேற்கொண்டதாலும் தமிழகத்தை பின்னுக்கு தள்ளி மேற்கண்ட நிறுவனங்களின் முதலீடுகளையும், வேலை வாய்ப்புகளையும் ஆந்திர மாநிலம் பெற்றுள்ளது தமிழகத்திற்கு மிகப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. சுலபமாக வந்திருக்க வேண்டிய முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் நழுவியதை தமிழகத்தின் த வெ க அரசு கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தொடர்புடைய நிறுவனங்கள் தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிற நிலையிலும், கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு ஆந்திராவிடம் பறிகொடுத்ததற்கு த வெ க அரசு வெட்கப்பட வேண்டும்" நாராயணன் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார்.