சென்னை: மேல்மா சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்கான நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மேல்மா சிப்காட் விரிவாக்கத்தை எதிர்த்தது தவெக. இந்தச் சூழலில் நில எடுப்பு அறிவிக்கை வெளியிடப்பட்ட நிலையில், அந்த அறிவிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை 3-வது யூனிட் விரிவாக்கத்துக்காக, மேல்மா உட்பட 11 கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை தமிழ்நாடு அரசு கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், தற்போதைய தவெக அரசு, மேல்மா கிராமப் பகுதியில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக புதிய அரசாணையை வெளியிட்டது. கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி தமிழக அரசிதழில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, செய்யாறு தொழிற்பேட்டை விரிவாக்கப் பணிகளுக்காக மேல்மா கிராமத்தில் 22.1600 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கையகப்படுத்தப்படும் நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு சிப்காட் மேலாண்மை நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும், நில விவரங்களை திருவண்ணாமலை சிறப்பு வருவாய் அலுவலர் (நில எடுப்பு) அலுவலகத்தில் சரிபார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற தமிழக வெற்றித் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில், மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேல்மா பகுதியில் 11 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2,800 ஏக்கர் விவசாய நிலங்களை அழித்துச் சிப்காட் அமைக்கும் முயற்சிகளை தவெக வன்மையாகக் கண்டித்தது. தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மேல்மா கிராமத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களின் போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்தார். மேலும், "விவசாயிகளின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதே முதன்மை கடமை" என்றும், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் திட்டங்களைக் கைவிட வேண்டும்" என்றும் கூறியிருந்தார். இந்தச் சூழலில் தற்போது தவெக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், மேல்மா கிராமத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கான புதிய அரசாணை வெளியானதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்புக் குரல்களை ஒலித்தன. தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதா தவெக அரசு என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து, மேல்மா சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்கான நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்றுள்ளது தமிழ்நாடு அரசு. செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்பட்ட மேல்மா கிராமத்தில் சிப்காட் நில எடுப்பு அறிவிக்கை திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நிலம் எடுக்க அரசாணை
ஆட்சிக்கு வருவதற்கு முன் எதிர்ப்பு
அறிவிக்கை வாபஸ்