“விஜய் தலைமையிலான தவெக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது” - ஆரூடம் சொன்ன எடப்பாடி பழனிசாமி!

  • வேலூர்: "தவெக அரசு ஐந்து ஆண்டுகள் நிலைக்காது" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அப்படி தவெக ஆட்சி நிலைத்தால் 20 லட்சம் கோடி ரூபாயாக கடன் உயர்ந்துவிடும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    Advertisement

    ராணிப்பேட்டை மாவட்டம், அரப்பாக்கத்தில் நடந்த அதிமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்க அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வேலூர் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சினிமாவில் எப்படி நடக்கிறதோ, அது போன்று தமிழக சட்டப்பேரவையில் நடக்கிறது. உண்மையான சட்டப்பேரவை நடக்கவில்லை. பொதுமக்களுடைய பிரச்சனைகளை பற்றி பேசுவதற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. சட்டப்பேரவையின் பொன்னான நேரத்தை வீணடிக்கிறார்கள்.

    Advertisement

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த "அம்மா உணவகம்" திட்டம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த அரசும் அம்மா உணவகங்களை சிறப்பாக செயல்படுத்துவோம் என்று சொல்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

    பல அமைச்சர்கள் இருக்கிறார்கள் ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒவ்வொரு துறை இருக்கிறது. எம்.எல்.ஏக்கள் கேள்வி எழுப்பும் போது துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் சொல்வதில்லை. அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் ராஜ் மோகன் ஆகியோர் தான் அதிகமாக பதில் சொல்கிறார்கள்.

    மானியக் கோரிக்கையை வேறொரு அமைச்சர் தான் தாக்கல் செய்கிறார். பொதுமக்களுக்கு பயனுள்ள திட்டம் எதையும் தமிழக வெற்றிக் கழக அரசு அறிவிக்கவில்லை. தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் குறிப்பாக பெரிய வாக்குறுதிகள் எதையுமே அவர்கள் நிறைவேற்றவில்லை. ஏதோ சம்பிரதாயத்துக்காக சிலவற்றை அறிவித்துள்ளார்கள்.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் சுமார் ரூ.28 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள். இதில் செலவு மட்டும் 25 ஆயிரம் கோடி. இன்னமும் 1 லட்சம் கோடி கடன் வாங்குவார்கள். இந்த தமிழக வெற்றி கழக அரசு ஐந்து ஆண்டுகள் நிலைக்காது. அப்படி நிலைத்தால் 10 லட்சம் கோடி கடன் 20 லட்சம் கோடி கடனாக மாறிவிடும்.

    நிதி மேலாண்மையை எல்லாம் சரி செய்ய ஒரு குழு அமைத்துள்ளார்கள். ஏற்கனவே இருந்த அரசும் ஒரு நிதி மேலாண்மை குழுவை அமைத்தது. அந்தக் குழு அமைத்த பிறகு 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கினார்கள். இன்றைக்கு பருப்பு, அரிசி மற்றும் சர்க்கரை விலைவாசி உயர்ந்துவிட்டது.
    சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் திட்டம் என்பது அவர்கள் பதவியில் இருக்கும் போது தான் காரை பயன்படுத்த முடியும். பதவி முடிந்த பின்பு காரை திருப்பிக் கொடுக்க வேண்டும். திமுக அரசு ஆட்சியில் இருக்கும் போது அப்போது எதிர்க்கட்சி தலைவராக நான் இருந்தேன். நான் முதல்வராக இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் அரசு காரை பயன்படுத்தினேன். இப்போது என் சொந்த காரை பயன்படுத்துகிறேன்.

    Advertisement

    சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை செய்யப்படுவது தொடரலாம். நேரலையை மக்கள் பார்க்கட்டும். இதற்காக கடந்த ஆட்சியின்போது நாங்கள் நீதிமன்றம் வரை சென்றோம். தற்போதைய அரசு சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது. ஆனால் ஆளுங்கட்சி தரப்பு வாக்குவாதம் செய்யும்போது அதை நேரலையில் காண்பிப்பது கிடையாது. எதிர்த்தரப்பில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களைத்தான் காண்பிக்கிறார்கள்.

    சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்கள் பிரச்சனையை பேசுகிறார்கள். அதற்கு தீர்வு காண வேண்டியது ஆளும் கட்சியின் கடமை. ஆனால், அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்துவது கிடையாது. ஏதாவது மக்களுடைய பிரச்சனையை எடுத்துச் சொன்னால் அதற்கு நேர்மாறாக பேசி அவையின் கவனத்தை திசை திருப்புகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    AIADMK General Secretary Edappadi Palaniswami (EPS) has stated that a TVK government would not last for five years. He further remarked that if a TVK regime were to endure, the debt would rise to ₹20 lakh crore.