மாணவர்களுக்கு பிரியாணி கிடையாதா? கல்வி நிதியில் கை வைத்த.. முதலமைச்சர் விஜய்!

  • சென்னை: நிதியமைச்சர் மரிய வில்சன் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார். இதில் கல்விக்கான நிதி கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு குறைக்கப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. நிதி குறைப்பால், மாணவர்களுக்கு பிரியாணி போட முடியாத சூழல் உருவாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.

    Advertisement

    கடந்த நிதி ஆண்டில் திமுக தலைமையிலான தமிழக அரசு, பள்ளி கல்விக்காக ரூ.46,767 கோடியை ஒதுக்கியிருந்தது. ஆனால் இன்று பட்ஜெட்டை வாசித்த அமைச்சர் மரிய வில்சன், பள்ளி கல்விக்கு 44,523 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது.. இந்த ஆண்டு ரூ.2,244 கோடி நிதி குறைக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    நிதி ஒதுக்கீடு

    அதேபோல, உயர்கல்வியை பொறுத்தவரை கடந்த ஆண்டு ரூ.8,494 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு, ரூ.8,393 ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி உயர்கல்வியில் ரூ.101 கோடி குறைக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக கல்வி நிதி ரூ.2,345 கோடி குறைக்கப்பட்டிருக்கிறது.

    அரசு பள்ளிகள்

    தமிழகத்தை பொறுத்தவரை அரசு பள்ளிகளிலிருந்து தான் கடந்த காலங்களில் ஏராளமான தலைவர்கள், விஞ்ஞானிகள் உருவாகியிருக்கின்றனர். அப்படிப்பட்ட பெருமை கொண்ட பள்ளி கல்வியை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். சரியான அடிப்படை வசதிகள் இல்லாதது, போதுமான ஆசிரியர்கள் இல்லாதது, விளையாட்டு வசதிகள், மைதானம் இல்லாதது, போதைப்பொருட்கள் பயன்பாடு என.. அரசு பள்ளிகளின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

    Advertisement

    நிதி குறைப்பு ஏன்?

    இதையெல்லாம் சரி செய்ய வேண்டும் எனில், பள்ளிக்கல்வித்துறைக்கு போதுமான அளவுக்கு நிதியை ஒதுக்க வேண்டும். அப்போதுதான் அரசு பள்ளிகளின் தரம் மேம்படும். மாணவர்கள் அரசு பள்ளிகளை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். இதெல்லாம் தெரிந்தும் கூட, தவெக அரசு போதுமான நிதியை ஒதுக்காமல் இருப்பது ஏன்? ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதியை விட கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டிய சூழலில், நிதியை குறைத்தது ஏன்? என்று மாணவர்களும், பெற்றோர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    பிரியாணி போடுவாரா அமைச்சர்?

    சமீபத்தில் அரசு பள்ளிகள் குறித்து பரவலாக பேச்சுகள் எழுந்தன. காரணம், வாரத்திற்கு ஒரு நாள் மாணவர்களுக்கு பிரியாணி போட திட்டமிட்டு வருகிறோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியிருந்தார். அடடே அரசு பள்ளியில் இப்படி ஒரு அசத்தலான மாற்றமா? என்று பலரும் ஆச்சரியமடைந்திருந்தனர்.

    Advertisement

    ஆனால், பட்ஜெட்டில் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மட்டுமல்லாது நிதியும் குறைக்கப்பட்டிருப்பதால் பிரியாணி போடுவதற்கான வாய்ப்புகள் இருக்காது என்றே சொல்லப்படுகிறது.

    English Summary

    School Education: Finance Minister Maria Wilson has presented the budget. Criticisms have arisen that the allocation for education in this budget is lower than that of the previous year.