பொறுப்பு துணைவேந்தர்கள் நியமனம் செய்த தவெக அரசு.. சட்ட விதிகளை மீறியதாக சர்ச்சை!

  • சென்னை: தமிழ்நாட்டில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகிய 2 பல்கலைக்கழங்களில் மூத்த பேராசிரியர்களை பொறுப்பு துணை வேந்தர்களாக தமிழக அரசு நியமித்துள்ளது. தேடுதல் குழுவை அமைக்காமல் சட்ட விதிகளை மீறி நியமனம் செய்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் உள்ள 20 மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக தமிழ்நாடு ஆளுநர் இருந்து வருகிறார். இதில் 18 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாத நிலை உள்ளது. மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமனம் செய்வதில் கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை இருந்து வருகிறது.

    Advertisement

    துணைவேந்தர்களை நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) உறுப்பினர் நியமனம் செய்யப்பட வேண்டும் என முன்னாள் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வலியுறுத்தினார். ஆனால், அப்படி செய்தால் மாநில உரிமைகள் கேள்விக்குறியாகும் என கூறிய முந்தைய திமுக அரசு, மாநிலத்தின் நிதியில் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களின் ஆளுநர் வேந்தராக இருக்கக்கூடாது, மாநிலத்தின் முதலமைச்சர்தான் வேந்தராக இருக்க வேண்டும் என உறுதியாக இருந்தது.

    அதற்கான சட்ட திருத்தமும் மேற்கொள்ளப்பட்டு அந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அது திமுக அரசிற்கு சாதகமாக அமைந்தது. இருப்பினும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

    Advertisement

    அதன் காரணமாக, 18 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமனத்திற்கான தேடுதல் குழுவை அமைப்பதில் சிக்கல் தொடர்ந்தது. துணைவேந்தர்கள் இல்லாததால் பல்கலைக்கழகங்கள் நிர்வாக பிரச்சனைகளில் சிக்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு, துணைவேந்தர்கள் நியமனத்திற்காக 5 பேர் கொண்ட தேடுதல் குழுவை அமைக்கலாம் என உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்தது. அதற்கான சட்ட மசோதா, நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், இதுவரை அதுதொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படவில்லை. நடப்பு சட்டசபை அமர்வில் தமிழக முதல்வர் விஜய் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் நல்ல செய்தி அறிவிப்பார் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கடந்த வாரம் சட்டசபையில் தெரிவித்திருந்தார்.

    Advertisement

    இந்த நிலையில், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் மூத்த பேராசிரியரை, துணைவேந்தராக கூடுதல் பொறுப்பில் நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியர் பிரபாகர் மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியர் ஜெயகாந்தன் ஆகியயோர் பொறுப்பு துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அடுத்ததாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட மற்ற பல்கலைக்கழகங்களிலும் கூடுதல் பொறுப்பு நிலையில் துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. துணைவேந்தர் நியமனத்துக்கான தேடுதல் குழுவை அமைக்காமல் சட்ட விதிகளை மீறி பொறுப்பு துணைவேந்தர்களை தவெக அரசு நியமனம் செய்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

    English Summary

    Amidst the ongoing impasse regarding the appointment of Vice-Chancellors for universities in Tamil Nadu, TVK government has appointed senior professors as 'Vice-Chancellors-in-charge' for 2 universities. A controversy has arisen, with allegations that these appointments violate legal norms as no search committee was constituted.