ரேஷன் கடை துவரம் பருப்பு.. திமுக ஆட்சியைவிட தவெக ஆட்சியில் 187 கோடி சேமிப்பு.. எப்படி?

  • சென்னை: ரேஷன் கடைகள் மூலம் துவரம் பருப்பைத் தமிழக அரசு மானிய விலையில் வழங்கி வருகிறது. இச்சிறப்புப் பொது விநியோகத் திட்டத்திற்காகக் கிலோவுக்கு ரூ. 77.89 என்ற விலையில் தவெக அரசு துவரம் பருப்பைக் கொள்முதல் செய்துள்ளது. இது முந்தைய திமுக ஆட்சியில் கிலோவுக்குச் செலுத்தப்பட்ட ரூ. 109.15 என்ற விலையை விடச் சுமார் ரூ. 31 (29%) குறைவாகும். இதன் மூலம் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் தமிழக அரசுக்கு ரூ. 187.56 கோடி சேமிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மானிய விலை துவரம் பருப்பிற்காகத் டெண்டர் விடுவது வழக்கமான நடைமுறையாகும். அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியால் 2007-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி இச்சிறப்பு பொது விநியோகத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதிருந்து, ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை முறையே ரூ.30 மற்றும் ரூ.25 என்ற மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

    Advertisement

    ஒவ்வொரு மாதமும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு அட்டைக்கு ஒரு கிலோ வீதம் விநியோகம் செய்ய 20,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு ஒதுக்கப்படுகிறது. இவர்களில் 86% முதல் 88% வரையிலான அட்டைதாரர்கள், கிலோவுக்கு ரூ. 30 என்ற மானிய விலையில் இப்பொருளை வாங்கிப் பயனடைகிறார்கள்.

    இவர்களுக்காக ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 60,000 டன் துவரம் பருப்பைக் கொள்முதல் செய்ய தவெக அரசு ரூ. 467.34 கோடியைச் செலவிட்டுள்ளது. ஆனால், அதே அளவு, தரம் மற்றும் விவரக்குறிப்புகளைக் கொண்ட பருப்பைக் கொள்முதல் செய்ய திமுக அரசு கடந்த ஆண்டு ஜூலை முதல் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ரூ. 654.9 கோடியைச் செலவிட்டிருந்ததாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

    Advertisement

    'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, துவரம் பருப்பு கொள்முதலுக்கான அடுத்த மூன்று ஒப்பந்தங்களிலும் (அதாவது ஒன்பது மாதங்களுக்கு) இதே குறைந்த விலையைப் பெற தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெற்றி பெற்றால், தமிழக அரசுக்கு ஏற்படும் ஆண்டுச் சேமிப்பு சுமார் ரூ. 750 கோடியாக அதிகரிக்கும் என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

    தற்போது சந்தையில் விலைவாசியில் பெரிய அளவில் ஏற்ற இறக்கம் ஏதுமில்லை; இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளிலும் துவரம் பருப்பு விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவுமில்லை. இச்சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, பருப்பு கொள்முதல் செலவில் ஏற்பட்டுள்ள இந்த கணிசமான குறைவு, "முந்தைய ஆட்சிக் காலத்தில் பருப்பு கொள்முதலுக்காக அரசு அதிக விலை கொடுத்ததா?" என்ற பலத்த சந்தேகத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

    Advertisement

    திமுக ஆட்சிக் காலத்தில் கோரப்பட்ட கடைசி ஒப்பந்தம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, மே 2-ஆம் தேதி இறுதி செய்யப்பட்டது. அதில் கொள்முதல் செய்யப்பட்ட பருப்பு இருப்பு ஆகஸ்ட் இறுதி வரை விநியோகத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் செப்டம்பர் முதல் விநியோகம் செய்வதற்கான துவரம் பருப்பைக் கொள்முதல் செய்ய ஆறு ஒப்பந்ததாரர்களுக்குத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வழங்கிய பணி ஆணைகள் மூலம், கழகம் கிலோவுக்குச் சராசரியாக ரூ. 77.89 மட்டுமே செலுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

    திமுக அரசு அதிக விலை கொடுத்ததா?

    தவெக அரசு பதவியேற்ற பிறகு கோரப்பட்ட முதல் டெண்டருக்கான கொள்முதல் விலை, அண்மையில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பு உள்ளிட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, கடந்த ஆண்டு ஜூலை முதல் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்பட்ட ரசீதுகளும், திமுக ஆட்சிக் காலத்தில் துவரம் பருப்பு கிலோவுக்கு ₹109.15 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டதை உறுதிப்படுத்துகின்றன.

    Advertisement

    சமீபத்தில் நடைபெற்ற டெண்டரில் துவரம் பருப்பு கொள்முதலுக்கான விவரக்குறிப்புகள் அல்லது தரநிலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார். முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட விலையை விட தற்போதைய கொள்முதல் விலை கிலோவுக்கு ₹31.26 குறைவாக இருப்பது குறித்துக் கேட்டபோது, நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படியே அனைத்து டெண்டர் நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாகவும், இம்முறை டெண்டரில் அதிக எண்ணிக்கையிலான விநியோகஸ்தர்கள் பங்கேற்றிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

    அதேசமயம், சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், திமுக ஆட்சிக் காலத்தில் சமையல் எண்ணெய் லிட்டருக்கு ₹143.91-க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போதைய தவெக ஆட்சியில் அது லிட்டருக்கு ₹154.99-க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக (அதிகமாக) உணவுத் துறை அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

    Advertisement

    இது தொடர்பாக மேலும் பேசிய அதிகாரி ஒருவர், "உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளில் உணவுப் பொருட்களுக்கான மொத்த விற்பனை விலை குறியீடு மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலவரப்படி பார்த்தால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் துவரம் பருப்பு கொள்முதல் விலை 5% முதல் 10% வரை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக அது 29% குறைந்திருக்கிறது. இது திமுக ஆட்சிக் காலத்தில் அதிக விலை கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. இது தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகள் குறித்து அரசாங்கமே தீர்மானிக்கும்.

    தவெக அரசின் கீழ் கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்புக்கான புதிய கொள்முதல் விலை விரைவில் ரேஷன் கடை ரசீதுகளில் பிரதிபலிக்கும். நுகர்வோர் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் கொள்முதல் விலைகளைத் தாங்களே ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்" என்றும் அவர் தெரிவித்தார்.

    இச்சிறப்பு பொது விநியோகத் திட்டத்திற்கு ஆண்டுதோறும் சுமார் ரூ. 5,600 கோடி முதல் ரூ. 6,000 கோடி வரை செலவாகிறது. சமீபத்திய ஆண்டுகளில், வங்கிகளிடமிருந்து கடன் பெற்றே அரசு இத்திட்டத்திற்கான நிதியை வழங்கி வருகிறது. கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையின்படி, இந்த ஆண்டு மார்ச் நிலவரப்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிலுவைக் கடன் மட்டும் ரூ. 27,181 கோடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த செய்தி குறித்து மறுப்பு தெரிவித்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் (அன்று உணவுத்துறை அமைச்சராக இருந்தவர்), சக்கரபாணி, தி.மு.க. அரசைக் காட்டிலும் த.வெ.க. அரசில் குறைந்த விலையில் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என ஆங்கில செய்தி தாளில் உணவுப் பொருள் கொள்முதலின் எந்த அடிப்படைகளையும் கருத்தில் கொள்ளாத ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது.

    இது உண்மையென்றால், குறைந்த விலையில் கொள்முதல் செய்த TNCSC மேலாண் இயக்குநர் ஏன் மாற்றப்பட்டார்? எதிர்காலத்தில், வரத்து குறையும்போதும் இதே விலையில் கொள்முதல் செய்வோம் என அரசினால் உறுதியளிக்க முடியுமா?

    இனிமேல், கொள்முதல் விலை உயர்ந்தால் அப்போது அதில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டலாமா?துவரம் பருப்பைக் குறைந்த விலையில் கொள்முதல் செய்தவர்கள், பாமாயிலை மட்டும் ஏன் முன்பைவிட அதிக விலைக்குக் கொள்முதல் செய்தார்கள் என கட்டுரையை எழுதியவர் விளக்குவாரா?

    துறையின் அமைச்சர், த.வெ.க.வில் உள்ள பிற தலைவர்களே கூட செய்யத் துணியாத ஒரு அவதூறை ஆங்கில நாளேடு உண்மைகளைச் சரிபார்க்காமல் வெளியிடுவது ஊடக அறமாகுமா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    English Summary

    The TVK government procured Toor dal at a rate lower by ₹31 per kilogram, Savings of ₹187 crore achieved in three months compared to the DMK regime.