சென்னை: தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதி இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பலரும் எதிர்பார்த்தபடி மதுராந்தகம் தொகுதி வேட்பாளராக மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி வேட்பாளராக சத்தியபாமாகா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் அதிமுகவில் இருந்து வெற்றி பெற்று, தவெகவில் இணைந்ததன் காரணமாகவே இடைத்தேர்தல் வந்தது.
தற்போது மீண்டும் இவர்களே தவெகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். இதுதொடர்பாக பத்திரிகையாளர் சுவாமிநாதன் பேசுகையில், மீண்டும் அதே வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டிருப்பது தவெகவுக்கு நெருக்கடியை உருவாக்கும். இதே தொகுதியில் தவெக சார்பாக 2 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
3 மாதங்களுக்கு முன் வேறு ஒருவருக்கு வாக்களித்தார்கள். அந்த கட்சி வட்டாரத்தில் புதியவர்களுக்கு வாய்ப்பு.. புதிய நபர்களுக்கு வாய்ப்பு அளிப்போம் என்ற தவெகவின் நிலைப்பாட்டையே கேள்விக்கு உள்ளாக்கும். இடைத்தேர்தலில் பெரியளவில் எதிரொலிக்காது என்றாலும், தவெகவின் பயணத்தில் நிச்சயம் பிரச்சனையாகும். இருவரும் வேட்பாளர்கள் ஆகி இருப்பதன் மூலமாக, 2 செய்திகள் கடத்தப்படுகிறது. அடுத்து வரும் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், 4ல் அதிமுகவை சேர்ந்தவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படும் என்று கடத்தப்படுகிறது. மறுபக்கம் ராஜினாமா செய்துவிட்டு வந்தாலும், வாய்ப்பு இங்கு அளிக்கப்படும் என்ற செய்தியும் கடத்தப்படுகிறது. இதனால் குதிரை பேர குற்றச்சாட்டை சமாளிக்க வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. சட்டசபைத் தேர்தலில் தவெக மற்ற கட்சிகளை விமர்சித்தது. ஆனால் தற்போது தவெகவை மற்ற கட்சிகள் விமர்சிக்கப் போகிறார்கள். அதேபோல் தாராபுரம் தொகுதி வேட்பாளர் சத்தியபாமா வாக்காளர்களுக்கு பரீட்சையமானவர். 81 ஆயிரம் வாக்குகளை பெற்று வென்றவர். அங்கு 46 ஆயிரம் வாக்குகளை தான் தவெக பெற்றது. அதேதான் மரகதம் குமரவேல். மதுராந்தகம் தொகுதியில் பாமகவுக்கு வாக்கு வங்கி உள்ளது. கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதால், அவர்களும் இந்த வேட்பாளர்களுக்கு சாதகமாக பேச வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது. குதிரை பேரத்தை கண்டித்தவர்களே, இப்போது ஆதரித்து பேச வேண்டும். தவெக முதன்மை சக்தியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மும்முனைப் போட்டி கூர்மையாக இருக்கும் என்றாலும், தவெகவுக்கு சாதகமான சூழல். விஜய் மற்றும் வேட்பாளர்களின் தனித்த செல்வாக்கு ஆகியவையால் மதுராந்தகத்தில் தவெக எளிதாக வெல்லும் என்று கருதுகிறேன். ஆனால் தாராபுரம் அப்படியல்ல. அங்கு அதிமுக பலமாக இருக்கும் தொகுதி.. அருந்ததியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி.. எல்.முருகன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதிமுக கூட்டணியில் பாஜகவும் உள்ளது. இதனால் அதிமுக கூட்டணியாகவும் பலமாக உள்ளது. அதனால் தாராபுரம் தவெகவுக்கு ஒரு பெரிய பலப்பரீட்சையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.