“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக!

  • சென்னை: "கொளத்தூரை இழந்தது போல, கோட்டையை இழந்தது போல, மொத்தத்தையும் நீங்கள் இழக்கப் போவது உறுதி. உங்களைச் சுற்றி இருப்போர் ஏமாற்றுவது அறியாமல் இருந்தால், நாங்கள் என்ன செய்ய ஸ்டாலின் சார்?" என திமுக தலைவர் ஸ்டாலுனுக்கு தவெக கேள்வி எழுப்பியுள்ளது.

    Advertisement

    திமுக தயவில் தான் தற்போது தவெகவின் விஜய் ஆட்சி நடைபெறுகிறது. ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக்கூடாது, அதன் மூலமாக பாஜக ஆட்சி தமிழ்நாட்டிற்கு வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில்தான் கூட்டணி கட்சிகளை வழி அனுப்பி வைத்தேன் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசியிருந்தார்.

    Advertisement

    ஸ்டாலினுக்கு தவெக பதில்

    அவருக்கு பதில் கொடுக்கும் வகையில் தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "மக்கள் சக்தியின் ஆதரவால், தனிப்பெரும் கட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். ஜனநாயகச் சக்திகளின் ஆதரவால் மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைக்கப்பட்டது. மக்களின் ஜனநாயக முறையிலான தீர்ப்பை மதித்து, ஜனநாயகச் சக்திகள் எங்களுக்குத் துணை நிற்கின்றன.

    ஆட்சி என்றால் தனக்கு மட்டுமே. அதிகாரம் என்றால் தன் குடும்பத்திற்கு மட்டுமே என்று சிலர் இருக்கிறார்கள். நாங்கள் அப்படியா இருக்கிறோம்? ஆதரவளித்த ஜனநாயகச் சக்திகளுக்கு முழு மனத்துடன் ஆட்சியில் பங்கையும் அதிகாரப் பகிர்வையும் அளித்தோம்.

    Advertisement

    கூட்டணி என்ற பெயரில் உடனிருக்கும் கட்சிகளின் மீது சவாரி செய்து, அரசியல் ஆதாயங்களை மட்டும் அனுபவிக்கும் சுயநலம் மட்டுமே கொண்ட தீய சக்தி நாங்கள் அல்ல. கூட்டணியை நாங்கள்தான் அனுப்பி வைத்தோம் என்று பெருந்தன்மை பேசிவிட்டு, அவர்களை ஏக வசனத்தில் ஏசுவது எந்த வகைத் தன்மையில் சேரும் ஸ்டாலின் சார்?

    ஆட்சிக் கட்டில் பற்றிய கனவிலேயே தூங்கும் உங்களைத் தொட்டிலில் போட்டுப் புட்டிப்பால் கொடுத்து மேலும் தூங்க வைப்பதுபோல, உங்களைச் சுற்றி இருப்போர் ஏமாற்றுவது அறியாமல் இருந்தால், நாங்கள் என்ன செய்ய ஸ்டாலின் சார்?

    இப்படியே இருந்தால் கொளத்தூரை இழந்தது போல, கோட்டையை இழந்தது போல, மொத்தத்தையும் நீங்கள் இழக்கப் போவது உறுதி. உங்கள் கொத்தடிமைக் கூட்டமே உங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஸ்டாலின் சார், இது உறுதி." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    எடப்பாடிக்கு பதிலடி

    அதேபோல, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் கொடுக்கும் வகையில், தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "திரைப்படத்தில் தோன்றி, புகழ் பெற்றவராம், நம் வெற்றித் தலைவர். இல்லையென்று யார் சொன்னது? தலைவரே இதைத் தேர்தல் பிரசார இறுதிக் கூட்டத்தில் சொன்னாரே. ஆனால், இதுகூடத் தெரியாமல், தீர்ந்துபோன சக்தி, திரைப்படப் புகழ் என்று ஏளனம் பேசுவது ஏனோ?

    வலுவான மக்கள் இயக்கமாக அ.தி.மு.க.வைக் கட்டமைத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், அதைக் கட்டிக் காத்த ஜெயலலிதா அம்மையாரும் திரைப்படங்களில் தோன்றிப் புகழ் பெற்றதைத்தான் இப்படிச் சொல்லி ஏளனம் செய்கிறாரா இந்தத் தீர்ந்துபோன சக்தி?

    Advertisement

    அப்பழுக்கற்ற தொண்டர்கள் இயக்கத்தை அடகு வைத்து, கரைந்து காணாமல் போகச் செய்த இந்தத் தீர்ந்துபோன சக்தியை எம்.ஜி.ஆரின் ஆவியும் ஜெயலலிதா அம்மையாரின் ஆவியும் எப்படி மன்னிக்கும்? கோட் சூட், போட்டோஷூட் என்று நீங்கள் பேசுவது மட்டும் பணிவான பேச்சா? பண்பான பேச்சா, மிஸ்டர் தீர்ந்துபோன சக்தி?

    ஆட்சிக்கு வந்து ஒரு மாதம்கூட ஆகாத எங்களைப் பார்த்து, முன்பு என்ன செய்தீர்கள் என்று கேட்கிறீர்களே, மற்றும் பலராக இருந்து மங்கிப் போன தீர்ந்துபோன சக்தியாரே. இது என்ன லாஜிக் தீ.போ.ச.?

    ரகசிய பேரம்

    குதிரை பேரம் நடத்த வேண்டிய அவசியமே எங்களுக்கு இல்லை. தீய சக்தியுடன் நீங்கள் நடத்திய ரகசிய பேரத்திற்காக, தடம் மாறித் தடுமாறி ஓரமாக ஒதுங்கியதுதான் உலகமறிந்த பேரம். அதனால் எங்கள் மீது அவதூறு பரப்புவதை இத்தோடு நிறுத்திக்கொள்வது நல்லது.

    Advertisement

    எங்கள் ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற நிறைவேற, நீங்கள் அரசியலில் கரையேற முடியாமல் தத்தளிக்கப் போவதைத் தமிழகமே பார்க்கப் போகிறது.

    பொதுச் செயலாளர் என்ற முறையில் தமிழகம் முழுமையையும் பற்றிப் பேசினால் பரவாயில்லை. ஒரே ஒரு மாவட்டத்தில் பெற்ற வெற்றியை மட்டும் சிலாகிப்பதன் அர்த்தம் என்ன? நீங்கள் மாவட்டத்துக்கு உள்ளேயே மடங்கி முடங்கி அடங்கிப் போனதாகத்தானே அர்த்தம்?

    இந்த லட்சணத்தில், தமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் வரும் என்கிறாரே தீ.போ.ச.! எத்தனை தேர்தல்கள் வந்தாலும் அத்தனையிலும் நீங்கள் மண்ணைக் கவ்வப் போவது நிச்சயம்.

    கட்சியைக் காப்பாற்றவே கதறும் நீங்கள், எங்கள் வெற்றித் தலைவர் மக்கள் விரும்பும் முதல்வர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரைப் பற்றிப் பேசுவதைப் பார்த்து, சிலுவம்பாளையத்தில் இருக்கும் சிறுபிள்ளைகூடச் சிரிப்பாய்ச் சிரிக்கிறது. இந்த யதார்த்தம் புரிந்தால் சரி." என விமர்சிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    “Just as you lost Kolathur and the Fort, it is certain that you are going to lose everything. If you remain unaware that those around you are deceiving you, what can we do, Stalin Sir?” TVK has asked DMK leader Stalin.