விஜய்க்கு துணையாக வந்த மன்சூர் அலிகான்.. முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசனும் தவெகவில் ஐக்கியம்!

  • சென்னை: பனையூர் தவெக அலுவலகத்திற்கு நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், அதிமுக முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன் ஆகியோர் வந்துள்ளனர். ஒவ்வொரு சனிக்கிழமையும் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா பனையூர் அலுவலகத்தில் நடந்து வரும் சூழலில், இன்றும் அதிமுக மற்றும் ஏனையக் கட்சிகளில் இருந்து பலரும் விலகி தவெகவில் ஐக்கியமாகி இருக்கின்றனர்.

    Advertisement

    தமிழக அரசியல் களத்தில் ஆளுங்கட்சியான தவெக நாளுக்கு நாள் தங்களது பலத்தை அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று மாற்றுக் கட்சியினர் தங்களை தவெகவில் இணைத்துக் கொள்ளும் பிரம்மாண்ட விழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

    Advertisement

    அந்த வகையில், இன்றும் பனையூர் அலுவலகம் அரசியல் மற்றும் திரையுலக பிரமுகர்களின் வருகையால் விழாக்கோலம் பூண்டுள்ளது. இன்றைய இணைப்பு விழாவின் முக்கிய ஈர்ப்பாக, தமிழ் சினிமாவின் பிரபல மூத்த நடிகரான மன்சூர் அலிகான் மற்றும் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் பனையூர் தவெக அலுவலகம் வந்தனர். ஆர்வி உதயகுமார் கடந்த வாரத்தில் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

    இவர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சரான கோமதி சீனிவாசனும் தவெக அலுவலகத்திற்கு வந்துள்ளார். இவர் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்து, பின்னர் மீண்டும் அதிமுக சென்று, அதன்பின் பாஜகவில் இருந்தவர். கடந்த 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்புதான் கோமதி ஸ்ரீஇனிவாசன் பாஜகவில் இணைந்தார். தற்போது பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார்.

    Advertisement

    அதிமுக மற்றும் தமிழகத்தின் ஏனையப் பிரதான கட்சிகளில் இருந்து நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது தாய் கட்சிகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, தவெகவில் ஐக்கியமாகி இருக்கின்றனர். காலை 10 மணியளவில் இணைப்பு விழா தொடங்குவதாக இருந்தது. ஆனால் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் வர தாமதம் ஏற்பட்டது.

    இதனால் பனையூர் அலுவலகம் கதவுகள் திறக்கப்படவில்லை. சுமார் நூற்றுக்கணக்கானோர் பனையூர் அலுவலக வாசலிலேயே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய கொடுமையான நிலை ஏற்பட்டது. 2 வாரங்களுக்கு முன் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தவெகவில் இணைந்த போதும், அதிமுகவினர் பனையூர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    TVK: Mansoor Ali Khan, Director RV Udayakumar, and Ex-AIADMK Minister Gomathi Srinivasan joined in TVK