துரை வைகோ பேசினது இதுக்குதானா.. டெல்லியில் வைகோவுக்கு சிறப்பு பதவி! கிரீன் சிக்னல் கொடுத்த விஜய்!

  • சென்னை: கடந்த சில நாட்களாக, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ திமுகவை விமர்சித்தும், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை பாராட்டியும் பேசி வந்திருந்தார். இப்படி இருக்கையில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வைகோவை நியமிக்க விஜய் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    தமிழக சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியிலிருந்து மதிமுக தேர்தலை எதிர்கொண்டது. விசிக, இடதுசாரிகள் வரிசையில் மதிமுகவும் தனி சின்னத்தில்தான் போட்டியிடும் என்று எதிர்பார்ப்புகள் எழுந்திருந்தன. ஆனால், கடைசி நேரத்தில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக வேட்பாளர்கள் போட்டிருந்தனர்.

    Advertisement

    வாய்ப்பை நழுவ விட்ட மதிமுக

    இப்படி இருக்கையில், தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் சூழல் மாறியிருக்கிறது. திமுக, அதிமுகவை ஓரம் கட்டி தவெக பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இருப்பினும் பெரும்பான்மை இல்லாததால், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐயுஎம்எல் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. இதற்கு கைமாறாக 2 எம்எல்ஏக்களை கொண்டிருந்த விசிக, ஐயுஎம்எல் கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவியை தவெக கொடுத்திருந்தது.

    துரை வைகோவின் விமர்சனம்

    இப்படியாக அமைச்சரவையில் இடம்பெறும் வாய்ப்பை மதிமுக தவறவிட்டிருந்தது. ஒருவேளை மதிமுக வேட்பாளர்கள் தனி சின்னத்தில் நின்றிருந்தால் நிச்சயம் அக்கட்சியும் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும். இந்த ஆதங்கம் கட்சியின் நிர்வாகிகளிடையே எதிரொலித்திருந்தது. மட்டுமல்லாது துரை வைகோவும் திமுக குறித்து வெளிப்படையாக விமர்சித்து பேச தொடங்கியிருந்தார்.

    Advertisement

    திமுக மீதான விமர்சனம்

    "திமுக கூட்டணியில் இருந்த கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுமே தொகுதிப் பங்கீடு குறித்து அதிருப்தியில் இருந்தன. ஆனால், கூட்டணி ஒற்றுமை கருதி நாங்கள் அதனை ஏற்றுக்கொண்டோம். எங்களைப் பொறுத்தவரை சின்னம் தான் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்" என்று துரை வைகோ பேசியிருந்தார்.

    மதிமுக vs திமுக

    அதேபோல, "பாம்புக்கு பால் வார்த்தாலும் நஞ்சை கக்கும். அதுபோல் திமுக ஒரு நச்சுப் பாம்பு. தில்லுமுல்லுக்கு சொந்தக்காரர்கள் திமுகவினர். அவர்களுடன் இருக்கக்கூடாது என்பதே அனைவரின் கருத்து" என மதிமுக அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ் பேசியிருந்தார். இப்படி தொடர்ந்து விமர்சித்து திமுகவை மதிமுக விமர்சித்து வந்தது. இதையெல்லாம் பார்க்கும்போது, நிச்சயம் திமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறியிருந்தனர்.

    Advertisement

    சிறப்பு பதவி

    இதனை உறுதி செய்யும் விதமாக, விஜய்யின் நடவடிக்கை அமைந்திருக்கிறது. அதாவது, மதிமுக தலைவர் வைகோவை, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்க விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படியெனில் இந்த பதவிக்காகத்தான் துரை வைகோ உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் திமுகவை விமர்சித்தார்களா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

    டெல்லி பிரதிநிதி பதவி கிடைத்த பிறகு, மதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து, பின்னர் தனி சின்னத்தில் போட்டியிடுவார்கள். அவர்களுக்கு ஆதரவாக விஜய் பிரச்சாரம் செய்வார் என்றும், பின்னர் மதிமுக தவெக அமைச்சரவையில் பங்கேற்கும் என்றும் சொல்லப்படுகிறது.

    English Summary

    TVK-MDMK: Over the past few days, MDMK Principal Secretary Durai Vaiko has been criticizing the DMK while praising the TVK government led by Chief Minister Vijay. Amidst this, reports have emerged that Vijay has decided to appoint Vaiko as the Tamil Nadu government's Special Representative in Delhi.