கிளாம்பாக்கத்தில் கூட்டமே இல்லை.. பேருந்துக்காக யாரும் காத்திருக்கவில்லை.. 2 நாள் கழித்து ரீல்ஸ்

  • சென்னை: நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளாம்பாக்கத்தில் கூட்டமே இல்லை.. பேருந்துக்காக யாரும் காத்திருக்கவில்லை.. இயல்பாக இருப்பதாக தவெக ஆதரவாளர்கள் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார்கள். உண்மையில் வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் தான் மக்கள் ஊருக்கு செல்ல அதிக அளவில் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் அரசு போதிய பேருந்துகள் இயக்கவில்லை என்றே மக்கள் குற்றம்சாட்டினார்கள். ஏனெனில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக ஆன்லைனில் ஒரு பேருந்து கூட முக்கிய வழித்தடங்கள் இயக்கப்படுவதாக காட்டவே இல்லை என்றும் கூறினார்கள்.

    Advertisement

    கடந்த திமுக ஆட்சியின் போது, ஒவ்வொரு வார இறுதியிலும் சிறப்பு பேருந்துகள் , டிமாண்ட் அதிகமாக உள்ள ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வந்தால் பல லட்சம் பேர் சென்னையைவிட்டு வெளியேறுவார்கள் என்பதால், அவர்களுக்காக வழக்கமாக பேருந்துகளுடன், 3+2 எனப்படும் தொலைதூர பேருந்துகள் தற்காலிகமாக கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும்.

    Advertisement

    அப்படி இயக்கப்படும் பேருந்துகள் எல்லாம் ஆன்லைனில் காட்டப்படும். மக்கள் எஸ்இடிசி இல்லை என்றாலும், நார்மல் பேருந்துகளில் முன்பதிவு செய்து கொண்டு சொந்த ஊர் செல்வார்கள், மறுபடியும் பண்டிகை முடிந்து ஊர் திரும்பும்போதும், அதேபோன்ற நார்மல் பேருந்துகளில் ஆன்லைனில் முன்பதிவு செய்து சென்னை திரும்புவார்கள். ஏழை, எளிய மக்களுக்கு இந்த பேருந்துகளே மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள், நார்மல் பேருந்துகளில் விரும்பி பயணம் செய்வார்கள். கட்டணமும் எஸ்இடிசியை விட குறைவாகவே இருக்கும்.

    ஆனால் தற்போது அப்படியான சிறப்பு பேருந்துகள் விநாயகர் சதுர்த்திக்காக கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் போதிய அளவு இயக்கப்படவில்லை.. குறிப்பாக சொல்வது என்றால், நார்மல் பேருந்துகள், கோவை, தேனி, மதுரை, திருநெல்வேலி, தஞ்சை, நாகர்கோவில்,திருப்பூர், ஈரோடு போன்ற வழித்தடங்களில் இயக்கப்படவில்லை. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    Advertisement

    ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாததால் நேரில் வந்து கிடைத்த பேருந்துகளில் எப்படியாவது ஊருக்கு போக வேண்டும் என்று திருச்சி, சேலம் என மாறி மாறித்தான் பலர் சென்றார்கள். சரியான முறையில் அரசு பேருந்துகள் இயக்கப்படாததே இந்த நிலைக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டின. இதையடுத்து கிளாம்பாக்கத்தில் சிறப்பு கூட்டம் நடத்திய அரசு அதிகாரிகள், ஊரில் இருந்து திரும்பி வரும் மக்களுக்காக தற்போது முறைப்படி சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளார்கள்.

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த 11 மற்றும் 12-தேதிகளில் அரசு போக்குவரத்து கழக பஸ்களின் மூலமாக சுமார் 2 லட்சத்து 31 ஆயிரத்து 450 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். தொடர் விடுமுறை முடிந்து 14 மற்றும் 15-ந் தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    இதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சென்னை திரும்புவதற்காக, வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 14-ந் தேதி 2,240 சிறப்புப் பஸ்கள் (திருச்சி- 255, மதுரை மற்றும் திண்டுக்கல்-300, சேலம்-200, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் வேலூர்-195, கோயம்புத்தூர்-50, திருநெல்வேலி-50, நாகர்கோவில்-50, தூத்துக்குடி-50, தென்காசி-50, கும்பகோணம்-225, திருவண்ணாமலை-325 விழுப்புரம்-185 மற்றும் இதர ஊர்களிலிருந்து - 305) இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அதே போன்று, 15-ந் தேதி 1,325 சிறப்புப் பஸ்கள் (திருச்சி-105, மதுரை மற்றும் திண்டுக்கல்-75, சேலம்-75, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் வேலூர்-200, கோயம்புத்தூர்-20, திருநெல்வேலி-10, நாகர்கோவில்-10, தூத்துக்குடி-15, தென்காசி-10, கும்பகோணம்125, திருவண்ணாமலை-175 விழுப்புரம்-85 மற்றும் இதர ஊர்களிலிருந்து - 420) என கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு மட்டும் மொத்தம் 3 ஆயிரத்து 565 சிறப்புப் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    மேலும், மாதவரம் பேருந்து நிலையத்திற்கு 160 சிறப்புப் பஸ்களும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு 370 சிறப்புப் பஸ்களும் என ஒட்டுமொத்தமாக 4,095 சிறப்புப் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள், அங்கிருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு எளிதாகவும் விரைவாகவும் செல்லும் வகையில் மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு 14-ந் தேதி மாலை மற்றும் இரவு நேரங்களில் 50 சிறப்புப் பஸ்கள் மூலம் 400 கூடுதல் பயண நடைகளும், 15-ந் தேதி அதிகாலை முதல் மேலும் 150 கூடுதல் பயண நடைகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களிலிருந்தும் சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் மாநகரப் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    அரசு போகும் போது போதிய அளவு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளாம்பாக்கத்தில் கூட்டமே இல்லை.. பேருந்துக்காக யாரும் காத்திருக்கவில்லை.. இயல்பாக இருப்பதாக தவெக ஆதரவாளர்கள் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார்கள். உண்மையில் வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் தான் மக்கள் ஊருக்கு செல்ல அதிக அளவில் ஆர்வம் காட்டினார்கள் என்பதும், போதிய பேருந்துகள் இல்லாமல் மக்கள் திண்டாடினார்கள் என்பதும் உண்மை என்று எதிர்க்கட்சியினர் கூறுகிறார்கள். முன்னதாக ஆகஸ்ட் 15ம் தேதி அன்று இதேபோன்று தான் சிறப்பு பேருந்துகள் எதுவுமே இயக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் அப்போது குற்றம்சாட்டியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    TVK members posted Reels two days later, claiming there was no crowd at Kilambakkam; what was the actual situation regarding the operation of special Vinayagar Chaturthi buses?