தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கல் குவாரிகளையும் உடனடியாக சோதனை செய்ய கனிம வளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு உத்தரவு பிறப்பித்துள்ளார். விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஷாஜகான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு ஆகியோர் கவர்னர் மாளிகையில் அமைச்சர்களாக பதவியேற்றயது மூலம் முழுமை அடைந்துள்ளது.
அமைச்சராக பதவியேற்றியுள்ள அனைவருக்கும் இலாக்கா ஒதுக்கப்பட்ட நிலையில், அனைத்து அமைச்சர்களும் துறை சார்ந்த பணிகளை வேகமாக செய்ய துவங்கியுள்ளனர். இந்த நிலையில் ஆரம்பமே அதிரடியாக கனிமவளத்துறை அமைச்சராக பதவியேற்றியுள்ள டாக்டர் பிரபு அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது மூலம் குவாரி உரிமையாளருக்கு பீதியை கிளப்பியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தற்போது 3,000-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் அரசு அனுமதியுடன் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகளில் பல இடங்களில் அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக புகார்கள் தொடர்ந்து வந்துக்கொண்டு இருக்கிறது. சமுக வலைத்தளத்திலும் இது தொடர்பான பல வீடியோக்களும், பதிவுகளையும் மக்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் பிரபு, முழுமையான ஆய்வு நடத்தி உண்மை நிலவரத்தை அறிய உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் ஹோடா கமிட்டி விதிமுறைகளைப் பின்பற்றி கல் குவாரிகள் இயங்க வேண்டும் என்றாலும், பல இடங்களில் இந்த விதிமுறைகள் மீறப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும், குவாரிகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள 'சேப்டி மைண்ட்' எனப்படும் பாதுகாப்பு குழுவினர் கூட முறையாக பணியாற்றவில்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தப் புகார்களை கருத்தில் கொண்டே அமைச்சர் டாக்டர் பிரபு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அமைச்சரின் உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு கல் குவாரியும் உடனடியாக ஆய்வு செய்யப்படும். அரசிடம் பெற்ற அனுமதிப்படி மட்டுமே கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றனவா அல்லது அதிகமாக எடுக்கப்படுகின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டும். சட்ட விரோதமாக இயங்கும் கல் குவாரிகள் எத்தனை உள்ளன, எவ்வளவு கற்கள் அதிகமாக எடுக்கப்பட்டுள்ளன, அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உடனடியாக திரட்டி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு விதிகளை மீறி அதிக கற்கள் வெட்டி எடுக்கும் குவாரிகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசுக்கு ஏற்பட்ட இழப்புக்கு ஏற்றவாறு அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த ஆய்வு மூலம் சட்டப்பூர்வமாக இயங்கும் குவாரிகள் தொடர்ந்து செயல்படவும், சட்ட விரோதமானவை முடக்கப்படவும் வழிவகை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனிம வளத்துறை அதிகாரிகள் விரைவில் அனைத்து குவாரிகளுக்கும் சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளனர். இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டில் கல் குவாரி தொழில் சட்டப்பூர்வமாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புடனும் இயங்க வேண்டும் என்ற அமைச்சரின் உத்தரவு தொழில்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.