சென்னை: கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவால் தான் தமிழக வெற்றி கழக அரசு நடைபெற்று வருவதாகவும், கம்யூனிஸ்டுகள் எப்போது ஆதரவை வாபஸ் பெறுவார்கள் என ஆளுநர் காத்துக் கொண்டிருக்கிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் முத்தரசன் கூறியிருந்தார். இந்த நிலையில் யார் தயவிலும் அரசு நடைபெறவில்லை என பதிலடி கொடுத்திருக்கிறார் அமைச்சர் ராஜமோகன்.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய் ஆட்சி அமைக்க தனி பெரும்பான்மை இல்லாததால், விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கம்யூனிஸ்டுகள் தவெக இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
குறிப்பாக பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக விவகாரத்தில் கம்யூனிஸ்டுகள் போராட்டத்தில் குதித்துள்ளதோடு சில தலைவர்கள் அரசுக்கு எதிராக பேசி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன். அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை வெளிப்படையாக எச்சரித்ததோடு, இடதுசாரிகள் தயவால் தான் தமிழக வெற்றிக்கழக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. "சிபிஐ சிபிஎம் கட்சிகள் ஆட்சிக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் வாங்கி விட்டால் அமைச்சரவை இருக்காது. எப்போது கம்யூனிஸ்டுகள் ஆதரவை வாபஸ் பெறுவார்கள் என ஆளுநரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்" என கூறியிருந்தார். இந்த நிலையில் முத்தரசனின் பேச்சுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் அமைச்சர் ராஜ்மோகன். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,,,,," பெண்கள், வாக்காளர்கள், மக்கள், சாமானியர்கள் தயவில்தான் ஆட்சி அமைத்துள்ளோம். எதிர்க்கட்சிகளுக்கு மெஜாரிட்டி இல்லை. 96 இடங்கள் வெற்றி பெற்றபோது கூட திமுக ஆட்சி அமைத்தது. யார் தயவும்.. யாருக்கும் தேவை இல்லை. திமுக கூட்டணிக் கட்சியினரிடம் திமுக பண்ணையார் மனப்பான்மையுடன்தான் இருந்தது. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை முதலமைச்சர் சொன்னார். அதைச் செய்துள்ளார். மக்களின் தயவுதான் ஆட்சி நடக்கிறது. வேறு யாருடைய தயவிலும் ஆட்சி நடக்கவில்லை. இந்த ஆட்சி தொடரும். கம்யூனிஸ்ட் தோழர் சண்முகத்தின் அரசியல் அனுபவம் எங்களது வயது. "நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே" எனப் பேசக் கூடியவர் அவர். அவர் பேசுவது அவரது உரிமை. சண்முகம் வயதில் பெரியவர். அவர் சொல்வதை எதை ஏற்றுக்கொள்ள முடியுமோ, அதனை வெளிப்படையாகவே நாங்கள் ஏற்றுக்கொள்வோம். நடைமுறைக்கு எது சரியோ, அதை மட்டுமே நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். சட்டமன்றத்தில் நடந்தது அனைத்து கட்சிக் கூட்டம்தான். சட்டமன்றத்தில் வேண்டாம், வெளியில் கூட்டங்கள் என்று சொல்வது அரசியல். எதனை ஏற்றுக்கொள்ள முடியுமோ, அதனை ஏற்றுக்கொண்டு செயல்பட்டுத்தான் இருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை பேச்சைக் குறைத்து செயலில் காட்டி வருகிறோம்.மதிப்போடும் மரியாதையோடும் சண்முகம் தோழர் சொல்லக்கூடியதை எதை ஏற்றுக்கொள்ள முடியுமோ, அதை ஏற்றுக்கொள்கிறோம். சொல்வதை அனைத்தும் ஏற்றுக் கொள்ள முடியாது" என தெரிவித்தார்.