சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்று சில வாரங்களே ஆன நிலையில், அமைச்சர்கள் தொடர்பான இரண்டு சர்ச்சைகள் அரசியல் அரங்கில் தவெக தலைவரும் முதல்வருமான விஜய்க்கு ஏற்படுத்தியுள்ளன. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கில்லி சரத் தொடர்பான பழைய வைரல் வீடியோவும், அமைச்சர் விஜய் பாலாஜியின் சர்ச்சைக்குரிய பேச்சும் சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளன. இதனால் தவெக தலைமை அதிரடி நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது, அமைச்சர் கில்லி சரத் தனது குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தபோது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி வெள்ளை நிறப் பொருள் ஒன்றை நசுக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த வீடியோ வெளியானதும், அமைச்சர் கில்லி சரத் போதைப் பொருள் பயன்படுத்தியதாகப் பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதையடுத்து அமைச்சர் கில்லி சரத் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தார். அதில், போட்டியை பார்த்துக்கொண்டிருந்தபோது தனது மகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அவசரமாக பாராசிட்டமால் மாத்திரையை ஏடிஎம் கார்டின் உதவியுடன் பொடியாக நசுக்கி கொடுத்ததாகவும் தெரிவித்தார். பழைய வீடியோவை திரித்து பரப்பி தங்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் இன்னும் பேசுபொருளாக இருந்து வரும் நிலையில், மற்றொரு அமைச்சர் விஜய் பாலாஜியின் பேச்சும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் விஜய் பாலாஜி, கடந்த தேர்தலை குறிப்பிட்டு பேசும்போது, "அரசியல்வாதிகள் ஊழல் செய்ததை பார்த்திருக்கிறோம். ஆனால் 2026 தேர்தலில் மக்களே மிகப்பெரிய ஊழல் செய்தீர்கள். வாங்க வேண்டிய இடத்தில் வாங்கிக்கொண்டு, குத்த வேண்டிய இடத்தில் சரியாக குத்தி நமது ஆட்சியை கொண்டு வந்தீர்கள்" என்று கூறினார். அமைச்சர் தனது பேச்சின் மூலம், தேர்தலின்போது வாக்காளர்கள் மற்ற கட்சிகளிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு தவெகவுக்கு வாக்களித்ததாக மறைமுகமாக ஒப்புக்கொண்டாரா என்ற கேள்வியை எதிர்க்கட்சிகளும் அரசியல் விமர்சகர்களும் எழுப்பி வருகின்றனர். தவெக அரசு பொறுப்பேற்று குறுகிய காலத்திலேயே அமைச்சர்கள் தொடர்பாக அடுத்தடுத்து சர்ச்சைகள் எழுவது, அரசின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலையும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனிடையே, அமைச்சர் கில்லி சரத் விவகாரம் குறித்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் விளக்கம் கேட்டதாகவும், இந்த விவகாரத்தில் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது செயல் தவறாகப் புரிந்துகொள்ளப்படும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் கில்லி சரத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், இந்த இரு விவகாரங்கள் தொடர்பாக அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும், அமைச்சரவை மாற்றத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் தற்போது அமைச்சரவையில் மாற்றம் செய்தால் அதனை வைத்து திமுக அரசியல் செய்ய வாய்ப்பாகி விடும் என்பதால் தற்போதைக்கு இருவரையும் பொது நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டாம் எனவும் இன்னும் சில வாரங்களில் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்கின்றனர் தவெகவினர்.கில்லி சரத்
விஜய் பாலாஜி
அவரது பேச்சின்போது அரங்கில் இருந்தவர்கள் சிரித்தாலும், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.தவெக அரசு
புஸ்ஸி ஆனந்த்
அமைச்சரவை மாற்றம்