சென்னை: தமிழக அரசியல் களத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பின் நிர்வாக ரீதியாகப் பல மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. பொதுவாக, மாநில அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் பாதுகாப்பு என்பது வழக்கமான நடைமுறைகளின்படி மிகக் கடுமையான நெறிமுறைகளுடன் பராமரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
அமைச்சர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக நியமிக்கப்படும் தனிப் பாதுகாப்பு அதிகாரிகள் அவசர அல்லது விதிவிலக்கான சூழ்நிலைகளைத் தவிர்த்து, பிற பணிகளுக்குத் திருப்பி விடப்படுவதில்லை என்பதே மரபாக இருந்து வருகிறது.
ஆனால், தற்போதைய சூழலில் இந்த நடைமுறை தலைகீழாக மாறியிருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்களில் சலசலப்பு எழுந்துள்ளது. டெல்லியிலிருந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கியத் தலைவர்கள் சென்னை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளுக்கு வரும்போதெல்லாம், மாநில அமைச்சர்களின் பாதுகாப்பில் உள்ள காவலர்களை உயர் அதிகாரிகள் வேறு பாதுகாப்புப் பணிகளுக்குத் திருப்பி விடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. சமீபகாலமாக டெல்லியிலிருந்து உயர் பொறுப்புகளில் உள்ள விஐபிக்கள் தமிழகத்திற்கு வரும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. இத்தகைய சூழலில், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்காகக் கூடுதல் போலீஸ் படையை ஒதுக்குவதற்குப் பதிலாக, ஏற்கனவே தமிழக அமைச்சர்களின் தனிப் பாதுகாப்பில் இருக்கும் அதிகாரிகளை அப்பணிகளுக்கு உயர் அதிகாரிகள் உடனடியாக மாற்றுவதாகக் கூறப்படுகிறது. பொதுவாக அமைச்சர்களின் அன்றாடப் பயணங்கள், பொதுமக்கள் சந்திப்புகள் மற்றும் தொகுதி ஆய்வுகளின்போது அவர்களின் தனிப் பாதுகாப்பு அதிகாரிகள் உடன் இருப்பது மிக அவசியம். ஆனால், விஐபி பாதுகாப்பு என்ற பெயரில் தங்கள் பிஎஸ்ஓ-க்கள் திடீரெனப் பறிக்கப்படுவதால், பாதுகாப்பு ஏதுமின்றி அமைச்சர்கள் களத்திற்குச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தற்போதைய நிலவரப்படி, சுமார் 20 அமைச்சர்கள் இந்த பாதுகாப்புப் பற்றாக்குறைப் பிரச்சனையைத் தொடர்ந்து எதிர்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் பிரதிநிதிகளாக தினசரி பொதுமக்களைச் சந்திக்கும் பொறுப்பில் உள்ள அமைச்சர்கள், முறையான பாதுகாப்பு கவசம் இன்றி செயல்படுவது தங்களுக்குக் கடுமையான நிர்வாகச் சிரமத்தை ஏற்படுத்துவதாக அதிருப்தி அடைந்துள்ளனர். அமைச்சர்களின் தனிப் பாதுகாப்பு அதிகாரிகள் திருப்பி விடப்படும் பிரச்சனை ஒருபுறமிருக்க, அமைச்சர்களின் இல்லப் பாதுகாப்பிலும் போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் வலுத்துள்ளது. குறிப்பாக, முக்கிய அமைச்சர் ஒருவரின் இல்லம் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் அமைந்துள்ளது. அமைச்சரவையின் மிக முக்கிய துறைகளில் ஒரு துறையை கவனித்து வரும் அமைச்சரின் மறைமலைநகர் இல்லத்திற்கு, இதுவரை நிரந்தர போலீஸ் பாதுகாப்பு எதுவும் வழங்கப்படவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினந்தோறும் பல்வேறு பகுதி மக்களும், கட்சி நிர்வாகிகளும் வந்து செல்லும் ஒரு அமைச்சரின் இல்லத்திற்குத் தொடர் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படாதது குறித்து துறை சார்ந்த வட்டாரங்களில் பலத்த கேள்விகள் எழுந்துள்ளன. அமைச்சர்களுக்கான பாதுகாப்பு என்பது தனிநபர் சார்ந்த சலுகை அல்ல.. அது மாநில நிர்வாக அமைப்பின் பாதுகாப்பு சார்ந்த விவகாரம். டெல்லி விஐபிக்களுக்கான பாதுகாப்பு என்பது மிக முக்கியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றாலும், அதற்காக மாநில அமைச்சர்களின் வழக்கமான பாதுகாப்பைத் தளர்த்துவது அல்லது பறிப்பது சரியான நிர்வாக நடைமுறையாக அமையாது என்ற கருத்து காவல்துறை மற்றும் அரசு வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. மாநில அமைச்சரவையின் 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரச்சனையை எதிர்கொள்வதும், ஒரு முக்கிய அமைச்சரின் இல்லத்திற்கே பாதுகாப்பு வழங்கப்படாததும் தற்போதைய ஆட்சிப் பணிகளில் ஒருங்கிணைப்புக் குறைபாட்டைச் சுட்டிக்காட்டுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. அமைச்சர்களின் முறையான பாதுகாப்பு விவகாரத்தில் தமிழக அரசும், காவல்துறை உயர்மட்ட அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு நிலையான வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தற்போதைய கோரிக்கையாக உள்ளது.டெல்லி விஐபி வருகையும்... அமைச்சர்களின் தவிப்பும்!
அமைச்சர் இல்லத்திற்குப் பாதுகாப்பு இல்லையா?
உயர் அதிகாரிகளின் அணுகுமுறையும் எழும் கேள்விகளும்