சென்னை: சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்தை தவெக அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இன்று சந்தித்துப் பேசியுள்ளனர்.
சென்னையில் கடந்த 2 வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களுடன் தவெக அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தவெக அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்தைச் சந்தித்துப் பேசியுள்ளனர். சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சமீபத்தில் இடதுசாரி மாணவர்கள் குறித்து கணக்கெடுக்க கோரிய விவகாரத்தில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலரை பணிநீக்கம் செய்ய வேண்டும், எங்கள் ஆதரவினால்தான் தவெக ஆட்சி நீடிக்கிறது என்றெல்லாம் தவெக அரசுக்கு எதிராக சில கருத்துகளைக் கூறியிருந்தார். விவரம் தெரியாதவரை ஏன் தலைமைச் செயலாளராக்குகிறீர்கள்? அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தப் போகிறீர்களா? அல்லது கம்யூனிஸ்டுகளை வைத்துக்கொண்டு ஆட்சியை தொடரப் போகிறீர்களா? என்று முதலமைச்சர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பெ.சண்முகம் காட்டமாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான் பெ. சண்முகத்தை தவெக அமைச்சர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர். குஜிலியம்பாறை வட்டாட்சியர், இடதுசாரிகளை கணக்கெடுக்க உத்தரவிட்ட விவகாரத்தில் கம்யூனிஸ்ட்கள், தவெக அரசு இடையே பூசல் ஏற்பட்டது. இடதுசாரி கட்சிகள், கரப்பான் பூச்சி கட்சியினர் நடந்தும் போராட்டங்களில் மாணவர்கள் பங்கெடுப்பதை தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் இடையே ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பிய விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இப்படியான சூழலில் தான் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. தமிழக முதல்வரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய், கூட்டணி கட்சிகளுடன் இணக்கத்தைப் பேணுமாறு அறிவுறுத்தியதன் அடிப்படையிலேயே இந்த மீட்டிங் நடந்துள்ளதாக பனையூர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சிபிஐஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், "குஜிலியம்பாறை வட்டாட்சியர் கம்யூனிஸ்டுகள் குறித்து தகவல் சேகரிக்கச் சொன்னது குறித்து ஏற்கனவே வருத்தம் தெரிவித்துவிட்டோம். இது அரசுக்கு தெரியாமல் நடந்த விஷயம். இனி இப்படி நடக்காது என உறுதி அளித்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.