வாய் திறக்காத தவெக அமைச்சர்கள்! ட்ரெயினிங் கொடுத்தும் பயனில்லை.. சட்டமன்றத்தில் சலசலப்பு!

  • சென்னை: தவெக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் சட்டமன்றத்தில் எப்படி பேச வேண்டும் என்று, கட்சி தலைமை சார்பில் 2 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், பயிற்சி கொடுக்கப்பட்ட பின்னரும், இன்று எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளிக்காதது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    தமிழகத்தில் முன்னெப்போதை விடவும், இந்த தேர்தலில்தான் புதிய எம்எல்ஏக்கள் அதிக அளவில் சட்டமன்றத்தில் நுழைந்திருக்கின்றனர். மொத்தம் 145 எம்எல்ஏக்கள் முதல்முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள். இதில் 93 எம்எல்ஏக்கள் தவெகவினரை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அதிலும் 26 புதிய எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    2 நாட்கள் பயிற்சி

    எனவே சட்டமன்ற கூட்டம் நடக்கும்போது எப்படி அதில் கேள்விகளுக்கு பதில் அளிப்பது? உள்ளிட்ட விஷயங்கள் குறித்து 2 நாட்கள் தவெக எம்எல்ஏக்களுக்கு கட்சி தலைமை பயிற்சி கொடுத்திருந்தது.

    17-வது சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இந்த இரண்டு நாள் பயிற்சி முகாம் சென்னை கலைவாணர் அரங்கில் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. முதலமைச்சர் விஜய்தான் இந்த பயிற்சியை தொடங்கி வைத்திருந்தார்.

    விஜய் தலைமையில்

    இதில், சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அவை மரபுகள் என்ன, கேள்வி நேரத்தில் எழும் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும், மற்றும் சட்டப்பேரவையில் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது போன்ற விதிகளும் நடைமுறைகளும் கற்றுத் தரப்பட்டன. மேலும், அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த முதன்மை செயலாளர்கள் இந்த பயிற்சியில் தங்கள் செயல்பாடுகள் மற்றும் மக்கள் நலன் திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளித்திருந்தனர்.

    Advertisement

    பயிற்சி வேஸ்ட்

    ஆனால், இவ்வளவு பயிற்சி பெற்ற பின்னரும், இன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிக்கவில்லை. குறிப்பாக மேதாது விவகாரம் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது, நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் பதிலளிக்கவில்லை. அதேபோல தவெக தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த பயிர்கடன் முழு தள்ளுபடி மற்றும் மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 ஆகிய எப்போது நிறைவேற்றப்படும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

    வாய் திறக்காத அமைச்சர்கள்

    இதற்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் வி.காந்திராஜ், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி உள்ளிட்டோர் விளக்கமளித்திருக்க வேண்டும். ஆனால், இவர்கள் விளக்கமளிக்கவில்லை. மாறாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோர்தான் பதிலளித்துள்ளனர்.

    Advertisement

    இது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிக்காமல், துறைக்கு தொடர்பில்லாத அமைச்சர்கள் பதிலளிப்பது ஏன்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    English Summary

    TVK ministers: The party leadership had conducted a two-day training session for TVK MLAs and ministers on how to speak in the Legislative Assembly. However, despite this training, the failure of ministers to respond to questions raised by the opposition parties today has caused a stir.