ள, ல, ழ, ஷ எதுவுமே வராது.. பேரு மட்டும் தமிழக வெற்றிக்கழகம்?.. தவெகவை கலாய்த்து தள்ளிய பாஜக

  • சென்னை: தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தமிழ் வார்த்தைகளை தடுமாறி வாசிப்பது, கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது குழப்பமடைவது என அடுத்தடுத்து எழுந்து வரும் விமர்சனங்களுக்கு மத்தியில், தமிழக பாஜக இப்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றுள்ளது.

    Advertisement

    தவெக ஆட்சி அமைந்தது முதலே, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலரும் புதியவர்கள் என்பதால், போகப்போக அவர்களது செயல்பாடுகள் சரியாகிவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தமிழே தகராறு என்ற விமர்சனம், சட்டப்பேரவை நிகழ்வுகளின் மூலம் அப்பட்டமாக வெளிப்பட்டது.

    Advertisement

    அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தமிழ் வார்த்தைகளை வாசிப்பதிலும், உச்சரிப்பதிலும் அடுத்தடுத்து தடுமாறுவது, தற்போது அரசியல் விமர்சனத்துக்கும் ட்ரோல்களுக்கும் வழிவகுத்துள்ளது.

    திக்கி திணறும் தவெக அமைச்சர்கள்

    முதன்முதலில், நிதியமைச்சர் மரிய வில்சன் நிதிநிலை அறிக்கையை வாசித்தபோதும், தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பிலும், எண்களை வாசிப்பதிலும் தடுமாற்றம் ஏற்பட்டது.. சட்டப்பேரவையில் முதல் நாள் இதை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.. திருக்குறளை கூட தவறாக படிக்கிறாரே? என்று ஆதங்கத்துடன் இணையத்தில் பதிவிட்டனர்.

    அதேபோல சட்டப்பேரவையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி, உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தொடர்புடைய தகவலை தெரிவிப்பதற்குப் பதிலாக, வேறு ஒரு டேட்டாவை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார்.. பிறகுதான், உறுப்பினர் கேள்விக்கு பதிலளிப்பதில் சிரமப்பட்டதை அறிந்த பேரவைத் தலைவர், உறுப்பினரின் கோரிக்கையை குறிப்பெடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சருக்கு அறிவுறுத்தினார்.

    Advertisement

    10க்கும் மேற்பட்ட இடங்களில் உச்சரிக்கவே திணறினார். தளபதியாரை வணங்கி என்பதற்கு பதில் "தளபிதியார்" என்றார்.. பேரவை தலைவர் என்பதற்கு பதில் பேரவர் தலைவர் என்றார்.- வடிவமைக்கப்பட்ட என்பதற்கு பதிலாக வடிக்கப்பட்ட என்றார்.. இல்லங்கள் என்பதற்கு பதிலாக இலக்கங்கள் என்றார்..

    தமிழக பாஜக

    இதெல்லாம் வீடியோவாக, சமூக வலைதளங்களில் பரவியது.. குறிப்பாக, சில வார்த்தைகளின் உச்சரிப்பில் ஏற்பட்ட தடுமாற்றத்தை சபாநாயகரே குறுக்கிட்டு சரிசெய்த காட்சிகளும் பேசுபொருளாகியுள்ளன.

    இதேபோல், அமைச்சர் கனிமொழி சந்தோஷ் முதல்முறையாக சட்டப்பேரவையில் உரையாற்றியபோது, தனக்கு பேச வாய்ப்பு வழங்கிய சபாநாயகருக்கு நன்றி தெரிவிக்கையில், "மனமார்ந்த நன்றி" என்பதற்கு பதிலாக எதிர்பாராதவிதமாக "மன்மத நன்றி" என்றார்.. தனது வார்த்தைப் பிழையை உணர்ந்த அவர் சிரித்துவிட்டார். அந்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் வைரலானது.

    Advertisement

    நேற்று கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷும் அதே வார்த்தையை தவறுதலாக உச்சரித்து, அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தினார்..

    தில்லுமுல்லு தேங்காய் சீனிவாசன்

    இப்படி, தவெக அமைச்சர்களின் தமிழ் உச்சரிப்பு தொடர்பான வீடியோக்கள் தொடர்ந்து பேசுபொருளாகி வரும் நிலையில், தமிழக பாஜக தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் இயக்குநர் கே. பாலசந்தரின் "தில்லுமுல்லு" திரைப்படக் காட்சியை பதிவிட்டுள்ளது.

    அந்த சீனில் தேங்காய் சீனிவாசன், வேலைக்கு வருபவர்களின் பெயர்களை பார்த்தே அவர்களை பற்றி உயர்வாக நினைத்துவிட்டு, பின்னர் நேர்காணலின்போது அவர்களுக்கு "ள, ல, ழ, ஷ" போன்ற உச்சரிப்புகள் சரியாக வரவில்லை என்பதை தெரிந்து கொள்வார்.

    Advertisement

    இந்த காட்சியை தவெக அமைச்சர்களின் தமிழ் உச்சரிப்பு விமர்சனங்களுடன் ஒப்பிட்டு பதிவிட்டுள்ள பாஜக, "ள, ல, ழ, ஷ எதுவுமே வராது.. ஆனால் பேரு மட்டும் தமிழக வெற்றிக்கழகம்? முதலில் பெயரை மாற்றுங்க" என்ற தொனியில் வீடியோவை வெளியிட்டுள்ளது.

    தகிடுதத்தம் தமிழ்

    இதனுடன், "குறைந்தபட்ச தமிழில் பேசவே தகிடுதத்தம் ஆடுபவர்கள் எல்லாம் தமிழகத்தின் அமைச்சர்கள்!" என்ற கேப்ஷனையும் பாஜக பதிவிட்டுள்ளது.

    இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, அரசியல் ரீதியாகவும் சமூக வலைதளங்களிலும் பல்வேறு கருத்துகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தமிழ் பேசும் விதம், கேள்விகளுக்கு அளிக்கும் பதில்கள் உள்ளிட்டவை தொடர்பான பழைய வீடியோக்களையும் நெட்டிசன்கள் மீண்டும் ஷேர் செய்து வருகிறார்கள்..!!

    English Summary

    TVK Ministers Tamil Slips.. BJP Mocks Their Tamil Skills With a Thillu Mullu Movie Video Going Viral