திண்டுக்கல்: மழை வேண்டி நிலக்கோட்டை தொகுதி தவெக எம்எல்ஏ அய்யனார் குடும்பம் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் மண் சோறு சாப்பிட்டு சாமியை வழிபட்ட சம்பவம் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதன் மூலமாக தவெக இன்னொரு அதிமுகவாக கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதாகவும் பார்க்கப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அதிமுக அமைச்சர்களாக இருந்த அனைவரும், காவிரியை வைத்துக் கொள்.. அம்மாவை திரும்பி கொடு என்று போஸ்டர் அடித்து கோயில்களில் மண் சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்தினர். இந்த சம்பவங்கள் எல்லாம் தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத பக்கங்களாக மாறிவிட்டது.
தற்போது அதிமுக பாணியில் தவெக அப்படியே பயணிக்க தொடங்கி இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் இன்னொரு அதிமுகவாகவே தவெக கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதி தவெக எம்எல்ஏ அய்யனார் செய்த சம்பவம் தான் இப்படியான விமர்சனங்களை பெற்று கொடுத்துள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் மழை பெய்யாததால் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக மக்களுக்கு குடிநீர் கூட கொடுக்க முடியாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன. அதேபோல் பருவத்திற்கு சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகளும் வேதனையில் இருக்கின்றனர். குடிநீருக்கே திண்டாடும் நிலை சாமானிய மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நிலக்கோட்டை தவெக எம்எல்ஏ அய்யனார் தலைமையில் அம்மைநாயக்கனூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம், வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதன்பின் எம்எல்ஏ அய்யனார் தனது குடும்பம் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அமர்ந்து மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்தார். கடவுள் நம்பிக்கை இருந்தாலும், மூட நம்பிக்கைகள் இருக்க கூடாது என்று தமிழக அரசு தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வந்திருக்கிறது. ஆனால் தற்போது முதல்வர் விஜய்யே ஜோதிடம், நியூமராலஜி உள்ளிட்ட விஷயங்களில் நம்பிக்கை கொண்டிருக்கிறார். இதனால் தவெக எம்எல்ஏ அய்யனாரின் செயல்பாடு அக்கட்சியினர் மத்தியில் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால் சாமானிய மக்களிடையே விவாதமாகி இருக்கிறது.இதுதான் SIR-ஐ எதிர்ப்பதா? பாஜக, ஞானேஷ் குமார், மோடி பெயரைக் கூட உச்சரிக்காத தவெக அமைச்சர் ராஜ்மோகன்!