சென்னை: தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் ரூபாய் 35 கோடி பேரம் பேசி ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமார் முன்ஜாமின் கோரிய வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம், தவெக ஆட்சியைக் கவிழ்க்க சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனக் கோரி 35 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரும் சேர்க்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரையும் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை.
இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமார் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "தவெக எம்எல்ஏ இளையராஜாவை நான் தொடர்பு கொண்டு பேசவில்லை. பேரம் பேசியதாகவோ மிரட்டல் விடுதாகவோ எந்தவிதமான புகாரும் என் மீது குறிப்பிடப்படவில்லை. முதல் தகவல் அறிக்கை தவிர வேறு எந்த குற்றச்சாட்டும் என் மீது இல்லை என்பதால் எனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் என்ற ஒரே காரணத்திற்காகவே என் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன் ஜாமீன் வழங்குவதற்கு உயர் நீதிமன்றம் எந்த நிபந்தனை விடுத்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு சென்னை ஐகோர்ட் நீதிபதி குமரப்பன் முன்பு இன்றுவிசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் இந்த வழக்கில் பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த வழக்கில் எம்எல்ஏக்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கை எம்பி எம்எல்ஏ வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி குமரப்பன் சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு வழக்கை மாற்ற ஐகோர்ட் பதிவாளருக்கு உத்தரவிட்டார். அதன்படி தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.பி எம்.எல்.ஏக்களுக்கான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி இளந்திரையன் முன்பு வழக்கு மாற்றப்பட்டது. அதன்படி இந்த வழக்கு வரும் 8ஆம் தேதி நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.