மாட்டிக்கினாரு ஒருத்தரு.. போன மாதமே இளையராஜாவுக்கு தூண்டில்! காத்திருந்து கதை முடித்த விஜய்! எப்படி?

  • சென்னை: தமிழக அரசியலில் "குதிரை பேரம்" விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜாவுக்கு கட்சி தாவ ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக வெளியான புகார் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரும் அடிபட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மாதமே புகார் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது தான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு விஜய் தான் காரணம் என்கின்றனர்.

    Advertisement

    2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தாலும், தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. இதையடுத்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் விஜய் தலைமையில் அரசு அமைந்தது.

    Advertisement

    ஆட்சி அமைந்த நாளிலிருந்தே பெரும்பான்மை பலம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விவாதங்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இந்த சூழலில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் இடையிடையே எழுந்து வந்தன.

    குதிரை பேரம்

    ஆனால் தற்போது நேரடியாக ஒரு எம்.எல்.ஏ. அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில், மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது கைது செய்யபட்டுள்ள நாகராஜ், தியாகராஜ் மற்றும் நரேஷ் ஆகிய மூவரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் மூலமாகத்தான் இந்த பேரத்தில் ஈடுபட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகம்

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.வை ஆட்சிக்கு எதிராக செயல்பட வைப்பதற்காக உயர்பதவியும், ரூ.35 கோடி வரையிலான பணமும் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டின் உண்மை நிலையை கண்டறிய காவல்துறை பல்வேறு கோணங்களில் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளது.

    செந்தில் பாலாஜி

    இந்த வழக்கில் முக்கியமாக அடிபடுவது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர்தான். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, கைது செய்யப்பட்டவர்கள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வி. அசோக் குமார் ஆகியோரின் பெயர்களை பயன்படுத்தி டாக்டர் இளையராஜாவை தொடர்புகொண்டு பேசியதாக தெரியவந்துள்ளது.

    Advertisement

    வைகோ

    தமிழக வெற்றிக் கழக அரசு கூட்டணி ஆதரவுடன் இயங்கி வருவதால், ஒவ்வொரு எம்.எல்.ஏ.வின் ஆதரவும் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சிகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. சமீபத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அளித்த பேட்டியின் போது பேசிய சில கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    காவல்துறை

    இதற்கிடையே தற்போது கைது செய்யப்பட்டவர்களின் செல்போன்கள், அழைப்பு , நிதி பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது?, அரசியல் பின்னணி ஏதேனும் இருக்கிறதா?, யாருடைய பெயர்கள் பயன்படுத்தப்பட்டன?, உண்மையில் யார் இதனை திட்டமிட்டனர்? எனவும் விசாரணை நடந்து வருகிறது.

    Advertisement

    இளையராஜா எம்எல்ஏ

    இந்த நிலையில் தான் தற்போது அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. கடந்த மாதமே குதிரை பேரம் தொடர்பான தகவல் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு கிடைத்ததாகவும், ஆனால் அப்போது புகார் அளித்தால் முதற்கட்ட பேச்சு வார்த்தைகள் உடனடியாக நிறைவு பெற்று விடும், யார் பின்னணியில் இருக்கிறார்கள் என்பது தெரியாமல் போய்விடும் என்பதற்காக இளையராஜாவை வைத்து ஆழம் பார்த்ததாகவும், தொடர்ந்து நாகராஜ் உள்ளிட்டோர் இளையராஜாவை தொடர்பு கொண்டு பேசியபோது பின்னணி குறித்து தெரிந்து கொள்வதற்காகவே இவ்வளவு நாள் தாமதித்ததாகவும். தற்போது செந்தில் பாலாஜி தான் இதற்குப் பின்னணியில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டே இளையராஜா புகார் அளித்ததாகவும் சொல்லப்படுகிறது.

    English Summary

    Fresh claims suggest TVK delayed complaint to identify alleged masterminds behind horse-trading bid targeting MLA Ilayaraja.