வழக்கறிஞருக்கு படித்துவிட்டு, டாக்டர்னு பெயருக்கு முன் போடுவது ஏன்? TVK எம்எல்ஏ கனிமொழி விளக்கம்!

  • கோவை: வழக்கறிஞருக்கு படித்துவிட்டு, டாக்டர் என்று பெயருக்கு முன் போட்டு கொள்வது ஏன் என்ற கேள்விக்கு தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் விளக்கம் அளித்துள்ளார். ஜோதிடத்தில் முனைவர் பட்டம் பெற்றதால், டாக்டர் என்று பலரும் அழைக்க தொடங்கியதாக கூறிய கனிமொழி சந்தோஷ், அதுவே ஒரு கட்டத்தில் புனைப்பெயர் போல் மாறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சட்டசபைத் தேர்தலில் தவெக சார்பாக கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிட்டு 42,140 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் கனிமொழி சந்தோஷ். யூடியூபரான இவர், ஜோதிடம் சார்ந்த வீடியோக்களை வெளியிட்டு வந்தார். திடீரென தவெகவில் இணைந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் இவரின் செயல்பாடுகள் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து கனிமொழி சந்தோஷ் ஆலோசித்த வீடியோ வெளியாகியது. அதில் கனிமொழி சந்தோஷ் பெரிய ஷோபாவில் தனியாக அமர்ந்திருக்க, அரசு அதிகாரிகள் பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் அரசு அதிகாரிகளை வீட்டிற்கு வரவழைத்து ஆலோசித்ததும் சர்ச்சையாகியது.

    இதனால் தவெகவினரே நேரடியாக கனிமொழி சந்தோஷை சாட தொடங்கினர். இதன்பின் அவர் விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதன்படி, எம்எல்ஏ அலுவலகத்தில் பெயிண்டிங் மற்றும் இதர பணிகள் நடந்து வருகிறது. அதனால் என்னுடைய ஜோதிட அலுவலகத்தில் அரசு அதிகாரிகளை சந்தித்தேன். அரசு அதிகாரிகளுக்கு பிளாஸ்டிக் நாற்காலியை கொடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

    Advertisement

    இதனிடையே மற்றொரு சர்ச்சையிலும் கனிமொழி சந்தோஷ் சிக்கியுள்ளார். அவரின் தேர்தல் பிரமாண பத்திரத்தில் வழக்கறிஞருக்கு படித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சோசியல் மீடியா பக்கங்களில் டாக்டர் கனிமொழி சந்தோஷ் என்று இருக்கிறது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் கனிமொழி சந்தோஷிடம் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு கனிமொழி சந்தோஷ், நான் ஜோதிடத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளோம். என்னுடைய ஆர்வம் ஜோதிடம் என்பதால், அதில் முனைவர் பட்டம் பெற்றேன். ஆனால் கல்வி தகுதி வழக்கறிஞர் தான். இதன் காரணமாக மக்கள் என்னை டாக்டர் என்று அழைக்க தொடங்கிவிட்டார்கள். ஒரு புனைப்பெயர் போல் மாறிவிட்டது.

    Advertisement

    இன்னொரு விஷயம் உடல்நலம் தொடர்பாக அதிகம் பேசி இருக்கிறேன். அந்த வீடியோக்களை அடிப்படையாக வைத்து கொண்டு என்னை டாக்டர் என்று சொல்லி சிலர் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்கள். ஆனால் நான் வழக்கறிஞர் மட்டும்தான் என்று தெரிவித்துள்ளார். தவெக எம்எல்ஏ-க்கள் பலரும் தொடர்ச்சியாக சர்ச்சையில் சிக்கி விளக்கம் அளிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பது மக்களிடையே விமர்சனத்தை பெற்றுள்ளது.

    English Summary

    TVK: TVK MLA Kanimozhi Santhosh has provided an explanation in response to the question of why she prefixes her name with "Dr." despite having studied law