சென்னை: கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ், சட்டசபையில் பேசும்போது, தமிழக முதல்வரும், நடிகருமான விஜய் நடித்த திரைப்படங்களின் பெயர்களை குறிப்பிட்டு கோர்வையாகப் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் முதல்முறையாக நேற்று சட்டசபையில் தனது உரையை ஆற்றினார். அப்போது முதல்வர் ஜோசப் விஜய்யை வாழ்த்தியும் பாராட்டியும் பேசி தனது உரையைத் தொடங்கினார்.
அப்போது, "தமிழ்த்தாயின் திருவருளையும், மக்கள் நலனையே வழிகாட்டியக் கொண்டும், எத்திக்கும் ஓலிக்கும் எங்கள் தலைவரின் நலத்திட்டங்களை புவியெங்கும் பரப்பும் பெரும் பொறுப்போடு இந்த அவையில் எனது முதல் பேச்சைத் தொடங்குகிறேன். மக்களின் மனதில் அழகிய தமிழ் மகனாக வீற்றிருக்கும் எங்கள் தளபதியார், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போது ஆபத்து நேர்ந்தாலும், அவர் உடனடியாக 'பீஸ்ட்' மோடுக்கு மாறிவிடுவார் என்பதற்கு உதாரணம் எங்கள் முதல்வரின் சிங்கப்பெண் திட்டம். பெண்களைக் கேலி செய்பவர்களுக்கு ஒரு 'வேட்டைக்காரனாக'வும் ஒட்டுமொத்த பெண்களின் நலனைக் காக்கும் ஒரு சிறந்த 'காவலனாக' விளங்குவதை எண்ணி ஒரு பெண்ணாக பெருகை கொள்கிறேன்" என்றார். தொடர்ந்து, தனது தொகுதிக்கான கோரிக்கைகளை முன்வைத்த எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ், "என்னுடைய தொகுதியான கவுண்டம்பாளையத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் 40, 50 வருடங்களாக மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் மின்கட்டண ரசீது போன்ற முறையான ஆவணங்களை வைத்துள்ளார்கள். இருப்பினும் இதுவரை இவர்களுக்கு பட்டா வழங்கப்படாததால் அவர்களுக்கான பொருளாதார உரிமைகள் மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. உதாரணமாக அவர்கள் முன்னேற்றத்திற்கு வங்கியில் கடன் வாங்க இயலாத சூழல், வாழும் இடத்தில் இருந்து வெளியேற்றப்படுவோமோ என்ற அச்சம் போன்ற இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். முந்தைய ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை ஏற்று, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு அம்மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கி அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எனது தொகுதிக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வருகை தருகிறார்கள். மேலும் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் மலைவாழ் மக்களும் இந்த மருத்துவமனையை நம்பியுள்ளனர். இதில் இருக்கும் அறுவை சிகிச்சை மையத்தினை மேம்படுத்தவும், மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவைகளுக்கான விபத்து சிகிச்சை மையம் மற்றும் அவசர சிகிச்சை மையங்களை ஏற்படுத்தவும், அதற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை விரைவில் வழங்கி உதவுமாறு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்" எனப் பேசினார். இறுதியாக தனக்கு பேச வாய்ப்பளித்த சபாநாயகருக்கு நன்றி கூறினார். அப்போது, மனமார்ந்த நன்றி என கூறுவதற்கு பதிலாக, வாய் தவறி "மன்மத நன்றி" எனக் கூறினார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.