தவெக MLA கபில் மீது போலீசார் வழக்குப்பதிவு.. செய்தியாளர்களை தாக்கியதாக 21 நாட்களுக்கு பிறகு ஆக்‌ஷன்!

  • ராணிப்பேட்டை: செய்தியாளர்களை தாக்கிய வழக்கில் 21 நாட்களுக்கு பிறகு தவெக எம்.எல்.ஏ கபில் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ கபில், அவரது தம்பி தனஞ்செழியன் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    Advertisement

    ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள ஒரு தியேட்டரில், சில வாரங்களுக்கு முன், தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியானது. இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த, சோளிங்கர் தவெக எம்.எல்.ஏ கபிலிடம், யூடியூபர் சிவா என்பவர் படம் குறித்து கேட்க மைக்கை நீட்டிய போது, கபில், அவரை தாக்க முயன்றுள்ளார்.

    Advertisement

    அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் எம்.எல்.ஏ கபில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து, சிவாவை தேடினர். அடுத்த சில நாட்களில் கடந்த 27 ஆம் தேதி சோளிங்கர் அண்ணா சிலை அருகே உள்ள சிவா வீட்டிற்கு கபில், அவரது தம்பி தனஞ்செழியன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் சென்றனர்.

    சிவாவை அவரது வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்து சென்று தாக்கி உள்ளனர். இது குறித்து அறிந்து, செய்தி சேகரிக்கச் சென்ற நாளிதழ் நிருபர்கள் அரங்கநாதன், 50, கல்யாணசுந்தரம், 70, ஆகியோரையும் தவெக எம்.எல்.ஏவுடன் வந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கினர்.

    Advertisement

    நிருபர்களின் அலறல் கேட்டு, பொதுமக்கள் அந்த கடை முன்பு குவிந்ததும், சோளிங்கர் போலீசார் விரைந்து வந்து அவர்களை மீட்டனர். காயமடைந்த நிருபர்கள், சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அவர்களின் உறவினர்கள், இந்த சம்பவத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். காயமடைந்த மூன்று பேரும், சோளிங்கர் போலீசில் புகார் அளித்தனர்.

    ராணிப்பேட்டை எஸ்.பி சிபினிடம், ராணிப்பேட்டை பத்திரிகையாளர்கள் நேரில் புகார் அளித்தனர். இந்நிலையில், செய்தியாளர்களை தாக்கிய வழக்கில் 21 நாட்களுக்கு பிறகு தவெக எம்.எல்.ஏ கபில் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ கபில், அவரது தம்பி தனஞ்செழியன் உள்ளிட்ட சிலர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    English Summary

    A case has been registered against TVK MLA Kapil 21 days after the assault on journalists. The police have booked Kapil—the TVK MLA for the Sholinghur constituency—along with his brother and others, under three sections of the law.