Mustafa: சபாநாயகர் இருக்கையில் என்னை தொப்பியுடன் அமர வைத்தது.. தவெக முஸ்தபா பெருமிதம்!

  • சென்னை: சபாநாயகர் இருக்கையில் தொப்பியுடன் அமர வைத்தது இஸ்லாமியர்களுக்கு கிடைத்த மரியாதை என தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா பெருமிதம் பொங்க தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மதார் பதுருதீன் என்கிற முஸ்தபா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    Advertisement

    அப்போது பேசிய அவர், வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாடு சட்டப்பேரவையில், இதுவரை இல்லாத வகையில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த என்னை, தொப்பி அணிந்தபடி சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்துவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளனர்.

    இதற்காக ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களும் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
    தொலைபேசி வாயிலாக தொடர்ந்து என்னைத் தொடர்பு கொண்டு பேசும் இஸ்லாமிய மக்கள், சிறுபான்மையினரின் பாதுகாப்பாளராகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தக் கூடிய அரசாகவும் வெற்றி தளபதியின் அரசு இருக்கும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்து வருகின்றனர்.

    தமிழக வெற்றி கழகத்தை கடந்த காலங்களில் ஏ டீம், பி டீம், சி டீம் என விமர்சித்தவர்கள், இஸ்லாமியர்களின் பாதுகாவலர்களா? இஸ்லாமியர்கள் வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் முன்னேற வேண்டும் என்றால், அவர்களுக்கு அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். அத்தகைய வாய்ப்பை வழங்கிய அரசு வெற்றி தளபதியின் அரசு.

    Advertisement

    இன்று இஸ்லாமியர்களின் கண்ணியம், மரியாதை மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில், சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்தும் வாய்ப்பை வழங்கியுள்ளனர்.

    இது ஒரு வரலாற்றுச் சாதனை. இதன் மூலம் சிறுபான்மை மக்களின் உண்மையான பாதுகாவலராக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் இருப்பது வெளிப்பட்டுள்ளது.

    யாரெல்லாம் தமிழக வெற்றி கழகத்தை பி-டீம் என்று விமர்சித்தார்களோ, அவர்கள்தான் கடந்த காலங்களில் அமைச்சர் பதவிக்காக பாஜகவைத் தேடியும், வாஜ்பாயைத் தேடியும் சென்றவர்கள். பாஜகவுக்கு புகழாரம் சூட்டியவர்களும் அவர்கள்தான்.

    திமுகவில் சாதிக் பாஷா, ரஹ்மான் கான் உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமிய தலைவர்கள் இருந்துள்ளனர். ஆனால், இஸ்லாமியர்களுக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் திமுகவில் வழங்கப்படவில்லை.

    Advertisement

    தமிழக வெற்றி கழகம் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கும் உரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் வழங்கி வருகிறது. இஸ்லாமியர்களின் பாதுகாவலர்கள் என்று கூறிக் கொண்டே சிலர் அவர்களை ஏமாற்றி வருகின்றனர்.

    1999 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி முற்பகல் 11.40 மணியளவில், இஸ்லாமியர்களின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று பேசியுள்ளனர். அதற்கான ஆதாரங்களை சபாநாயகரிடம் காண்பித்தபோது, அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.

    சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில், தங்களை இஸ்லாமியர்களின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுக இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது. சிறைவாசிகள் விடுதலை குறித்து பேசும் திமுக அரசு, இந்த சிறைவாசிகள் வெளியே வரக் கூடாது.

    Advertisement

    அவர்களின் மனநிலை தொடர்ந்து அதே நிலையில் உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் பொதுமக்களிடம் இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலைக்காக தாங்கள் குரல் கொடுப்பது போல் காட்டிக் கொள்கிறது.

    இஸ்லாமிய சிறைவாசிகள் வெளியே வரக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டு, இங்கு வந்து அவர்களை விடுதலை செய்வோம் என்று கூறுவது பச்சையான இரட்டை வேடம்.

    உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், இஸ்லாமிய சிறைவாசிகள் தொடர்ந்து அதே மனநிலையில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்யக் கூடாது என்று கூறிவிட்டு, இங்கு வந்து விடுதலை செய்வோம் என்று கூறுவது பச்சையான இரட்டை வேடமும் பச்சோந்தித்தனமும் ஆகும்.

    Advertisement

    இன்று தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள் மற்றும் பிற சமூக மக்கள் மத்தியில் திமுக அரசின் செல்வாக்கு குறைந்துவிட்டது. அந்த பயத்தின் உச்சத்தில்தான் திமுக அரசு தற்போது இஸ்லாமியர்களின் பாதுகாவலன் என்ற வேடத்தைப் போடுகிறது.

    உண்மையிலேயே சிறுபான்மை மற்றும் இஸ்லாமிய மக்களின் பாதுகாவலராக வெற்றி தளபதி இருக்கிறார் என்பதற்கு நானே சான்று என்றார்.

    English Summary

    TVK MLA Mustafa expresses his happienss over sitting in Tamil nadu Assembly Speaker's chair while wearing a cap is pride to all muslim society.