ஒய்யார சோபா.. அதிகாரிகளை வீட்டிற்கே அழைத்து மீட்டிங்?.. சர்ச்சைக்கு தவெக எம்.எல்.ஏ கனிமொழி விளக்கம்

  • கோவை: அதிகாரிகளை வீட்டிற்கே அழைத்து மீட்டிங் நடத்தியதாக கவுண்டம்பாளையம் தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் மீது விமர்சனம் எழுந்த நிலையில், விளக்கம் அளித்துள்ளார். தவெக எம்.எல்.ஏ கனிமொழி, ஒய்யாரமாக சோபாவில் அமர்ந்திருப்பதும், அவரைச் சந்திக்க வந்த அதிகாரிகள் பிளாஸ்டிக் சேர்களில் அமர்ந்திருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    Advertisement

    கோவை கவுண்டம்பாளையம் தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ், அரசு அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக அவரே பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. அவர் பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடினேன் என மூன்று புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.

    Advertisement

    ஆனால், அந்தப் புகைப்படங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டன. இந்தப் புகைப்படத்தைப் பார்த்தவர்கள் பல விஷயங்களை அலசத் தொடங்கிவிட்டார்கள். முதலில், அரசு அதிகாரிகளை வரவழைத்து எம்எல்ஏ ஆலோசனை நடத்தியது ஏன்? என்பதே பலரது கேள்வி.

    அடுத்து, ஒய்யாரமான சோபாவில் எம்எல்ஏ கனிமொழி அமர்ந்திருக்க, அவருக்கு எதிரே அரசு அதிகாரிகள் பிளாஸ்டிக் நாற்காலியில் போதுமான வசதிகள் இன்றி அமர்ந்திருந்தது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்விகள் எழுப்பினர். இதுகுறித்து நெட்டிசன்கள் பலரும் விமர்சித்தனர்.

    இதையடுத்து உடனடியாக ஒரு வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார் கனிமொழி எம்எல்ஏ. அந்த வீடியோவில் அவர் பேசுகையில், "நான் அதிகாரிகளை சந்தித்தது எனது வீடு அல்ல, எனது ஜோதிட அலுவலகம். பல ஆண்டுகளாக நான் ஜோதிடராக மக்களை சந்தித்து வந்த எனது பழைய ஜோதிட அலுவலகம்.

    Advertisement

    தற்போது, எனது புதிய எம்எல்ஏ அலுவலகத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அலுவலகத்தின் பெயிண்டிங் மற்றும் பிற பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. மக்கள் பயன்பாட்டிற்கு சிறப்பாகவும், அனைவரும் எளிதாக சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைக்கக்கூடிய வகையிலும் அதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    அந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை, வழக்கம்போல நான் எனது பழைய ஜோதிட அலுவலகத்திலேயே மக்கள், அதிகாரிகள் மற்றும் என்னைச் சந்திக்க விரும்பும் அனைவரையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து வருகிறேன்.

    எனக்கு மக்கள் சேவையே முதன்மை. அலுவலகம் எந்த இடத்தில் இருந்தாலும், மக்களின் நலனுக்காக என் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும். புதிய எம்எல்ஏ அலுவலகம் முழுமையாக தயார் ஆனவுடன், மேலும் சிறப்பான சூழலில் அனைத்து மக்களையும் அங்கு சந்தித்து, உங்கள் தேவைகள் மற்றும் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க உறுதியாக உள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Goundampalayam TVK MLA Kanimozhi Santhosh has issued a clarification following criticism that she held a "meeting" by summoning officials to her home. Controversy arose over visuals showing MLA Kanimozhi seated elegantly on a sofa, while the officials who had come to meet her were seated on plastic chairs.