சென்னை: தன்னிடம் கார் இல்லை என தவெக எம்.எல்.ஏ சபரி ஐங்கரன் இன்று சட்டசபையில் பேசி இருந்த நிலையில், பெரியகுளம் தொகுதிக்குள், 'எம்.எல்.ஏ' என்ற பெயர்ப் பலகை பொருத்திய காரில் சபரி ஐங்கரன் வலம் வருவதும், சபரி ஐங்கரனுக்கு சொந்தமான காரின் வாகன காப்பீடு 5 மாதங்களுக்கு முன்பே முடிந்ததும் அம்பலம் ஆகியுள்ளது.
தமிழக சட்டசபை இன்று கூடியதும் முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் விசிக எம்.எல்.ஏ ஜோதிமணியின் வேண்டுகோளை ஏற்று மக்கள் பணி செய்ய அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என அறிவித்தார். வாகனப் பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ. 75,000 வாகனப்படியும், தங்களது அலுவலகப் பணிகளுக்காக உதவியாளர் ஒருவரை நியமித்துக்கொள்வதற்கு ஊதியமாக மாதந்தோறும் ரூ. 25,000 வழங்கப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களும் வரவேற்பு தெரிவித்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் தவெக எம்.எல்.ஏ சபரி ஐங்கரன் பேசுகையில் "முதல்முறையாக சட்டமன்றம் வந்துள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு கார் தந்த முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம் ஒரு விஷயம் வேடிக்கையாக சொல்கிறேன். நான் கல்லூரி படிக்கும்போது காதல் தோல்வி ஏற்பட்டது. எனக்கு வேலையும் இல்லை, காரும் இல்லை. இரண்டையும் இன்றைக்கு முதலமைச்சர் விஜய் கொடுத்துள்ளார். நான் ஊரில் இருந்து ரயிலில் தான் சென்னைக்கு வருகிறேன். ஆட்டோவில் தான் சட்டமன்றம் வருகிறேன். சட்டமன்ற நுழைவு வாயிலில் காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்கின்றனர். நான் ஐடி கார்டு காட்டி தான் உள்ளே வர முடிகிறது. எம்.எல்.ஏ ஐ.டி கார்டு காட்டினாலும் அவர்கள் எளிதில் நம்புவதில்லை. மக்கள் பசியைப் போக்கும் விவசாயிகளுக்கும், மக்கள் பணி செய்யும் எம்.எல்.ஏ.க்களுக்கும் வெளியான இன்றைய அறிவிப்புகள் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது" என சபரி ஐங்கரன் தெரிவித்தார். சபரி ஐங்கரன் பேசியபோது, முதலமைச்சர் விஜய் சற்று அதிர்ந்து திரும்பிப் பார்த்த கலகலப்பான ரியாக்ஷன் தற்போது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது. இந்நிலையில், தன்னிடம் கார் இல்லை என சபரி ஐங்கரன் பேசி இருந்த நிலையில், அவர் தனக்குச் சொந்தமாக கார் இருப்பதாக வேட்பு மனுவிலலேயே தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தன்னிடம் சொந்தமாக கார் இல்லை என தவெக எம்.எல்.ஏ சபரி ஐங்கரன் சட்டசபையில் கூறியிருந்தார். ஆனால், சபரி ஐங்கரன், தன்னிடம் டாடா டிகோர் கார் உள்ளதாக தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பெரியகுளம் தொகுதிக்குள், 'எம்.எல்.ஏ' என்ற பெயர்ப் பலகை பொருத்திய காரில் வலம் வருகிறார் சபரி ஐங்கரன். தவெக எம்.எல்.ஏ சபரி ஐங்கரனுக்கு சொந்தமான காரின் வாகன காப்பீடு 5 மாதங்களுக்கு முன்பே முடிந்ததும் அம்பலம் ஆகியுள்ளது. தேர்தல் பிரமாண பத்திரத்தில் சபரி ஐங்கரன் தாக்கல் செய்திருந்த தகவல்களின்படி, அவரது சொத்து மதிப்பு 72 லட்ச ரூபாய் என்பது குறுப்பிடத்தக்கது.