“கொடுத்ததெல்லாம் கொடுத்தார்”.. பாட்டு பாடி வாழ்த்திய தவெக எம்எல்ஏ! முதல்வர் விஜய் கொடுத்த ரியாக்‌ஷன்

  • சென்னை: அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்றும், மாதாந்திர வாகனப்படியாக ரூ.75,000 வழங்கப்படும் என்றும், உதவியாளர் படியாக ரூ.25,000 வழங்கப்படும் என்றும் அறிவித்த முதல்வர் விஜய்க்கு பாடல் பாடி தனது நன்றியை தெரிவித்தார் தவெக எம்.எல்.ஏ சிந்து.

    Advertisement

    தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி பேசிய விசிக காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ ஜோதிமணி, 280 கி.மீ தொலைவில் இருந்து சட்டப்பேரவைக்கு வருவதாகவும், தன்னிடம் வாகன வசதி இல்லை என்றும், உதவியாளரை வைத்து ஊதியம் கொடுக்கும் அளவுக்கு பணம் இல்லை என்றும் தெரிவித்தார்.

    Advertisement

    எம்.எல்.ஏக்களுக்கு ஜாக்பாட்

    தொடர்ந்து, காலணி அணியாத எம்.எல்.ஏ-க்கள் இருப்பதாகவும், ஊழல் இல்லாத அரசு அமையவும், எம்.எல்.ஏ.க்களுக்கு உதவிடும் வகையிலும் வாகன வசதி செய்து தர வேண்டும் என முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை வைத்திருந்தார். அப்போது பேசிய சபாநாயகர் ஜேடிசி பிரபாகர், முதல்வரின் கரங்கள் அள்ளிக் கொடுக்கும் கரங்கள் எனத் தெரிவித்ததுடன், முதல்வர் விஜய் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜோசப் விஜய் இன்று காலை சட்டப்பேரவையில் பேசினார். அப்போது, "அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும். வாகன ஓட்டுநர், எரிபொருள், வாகன பராமரிப்புக்கு மாதந்தோறும் ரூ.75,000 வாகனப்படியாக வழங்கப்படும்" என்றும் தெரிவித்தார்.

    Advertisement

    முதல்வர் அறிவிப்பால் எம்.எல்.ஏக்கள் மகிழ்ச்சி

    மேலும், அலுவலகப் பணிகளில் உதவி செய்ய ஓர் உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதந்தோறும் ரூபாய் 25,000 உதவியாளர் படியாகவும் வழங்கப்படும். இதற்காக உரிய சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு ஆணைகள் வெளியிடப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்தார்.

    முதல்வர் விஜய்யின் அறிவிப்பைத் தொடர்ந்து அவருக்கு விசிக எம்.எல்.ஏ ஜோதிமணி நன்றி தெரிவித்தார். காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் தாரகை கத்பர்ட், பாமக கணேஷ்குமார் உள்ளிட்ட உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.

    பாட்டு பாடிய தவெக எம்.எல்.ஏ

    அதைத்தொடர்ந்து எழுந்து பேசிய தவெக எம்.எல்.ஏ சிந்து, பாடல் பாடி தனது நன்றியை தெரிவித்தார். "கொடுத்ததெல்லாம் கொடுத்தார்.. இவர் யாருக்காகக் கொடுத்தார்.. ஒருத்தருக்கா கொடுத்தார்.. இல்லை ஊருக்காகக் கொடுத்தார்.. ஒருத்தருக்கா கொடுத்தார்... இல்லை ஊருக்காகக் கொடுத்தார்" எனப் பாடினார். முதல்வர் விஜய், புன்முறுவலுடன் இதனை ரசித்தார். தவெக எம்.எல்.ஏ பாடல் மூலம் முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்ததை தவெக எம்.எல்.ஏக்கள் வரவேற்றனர்.

    Advertisement

    குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தவெக சார்பில் எம்.எல்.ஏ ஆனவர் சிந்து. தவெக வேட்பாளராகப் போட்டியிட்ட சிந்து 10,097 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேமுதிக வேட்பாளர் பிரதாப் 72,761 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையும் அதிமுக வேட்பாளர் பரிதா புருஷோத்தமன் 64,122 பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர். தவெக எம்.எல்.ஏ சிந்து இசை மற்றும் நடன அகாடமியை நடத்தி வருகிறார். 37 வயதான இவர், எம்.ஏ. ஆங்கிலம் படித்தவர்.

    English Summary

    TVK MLA Sindhu expressed her gratitude to Chief Minister Vijay by singing a song, following the announcement that all MLAs would be provided with cars, as well as a monthly vehicle allowance of ₹75,000 and an assistant allowance of ₹25,000.