ரூ.180 கோடி ரெடி.. விஜய் ஆட்சியை கவிழ்க்க ஹோட்டலில் ரூம் போட்டு வாடகை கட்டிய கார்ப்பரேட் நிறுவனம்

  • சென்னை: தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தவெகவின் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சதி செயலில் ஈடுபட்டதாக மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் தான் கைதானவர்களுக்கு, கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று கிண்டி நட்சத்திர ஹோட்டலில் ரூம் போட்டு கொடுத்து அதற்கான பில்லை செலுத்திய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. தவெக தலைவர் விஜய் முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான் விஜய்யின் ஆட்சியை கவிழ்க்க பெரிய சதித்திட்டம் நடந்துள்ளது. விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதால் அடுத்ததாக சட்டசபை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அவரை பதவியில் இருந்து இறக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று ஒரு டீம் தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசி உள்ளது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியின் தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையை தொடங்கினர்.

    ஐடிபிஎஸ் கருத்து கணிப்பு நடத்தி வரும் அரும்பாக்கத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, திருச்சி நரேஷ், மேடவாக்கத்தை சேர்ந்த தியாகராஜன், பள்ளிக்கரணை செல்வன், மணப்பாக்கத்தை சேர்ந்த சீனிவாசன், ஹஸ்தினாபுரத்தை ராஜேஷ், கரூரை சேர்ந்த ரமேஷ், கார்த்திக் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Advertisement

    இவர்கள் முன்னாள் அமைச்சரும், திமுகவின் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் தான் இந்த செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் அசோக் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியுள்ளார்.

    இந்நிலையில் தான் தற்போது இன்னொரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. தவெகவின் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று ஈடுபட்டுள்ளது. அரசியல்வாதிகள் தவிர இந்த கார்ப்பரேட் நிறுவனம் தான் இந்த சதித்திட்டத்தில் முக்கிய பங்காற்றி உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த கார்ப்பரேட் நிறுவனம் மொத்தம் ரூ.180 கோடியை தயார் நிலையில் வைத்துள்ளது. இந்த ரூ.180 கோடியை பயன்படுத்தி எம்எல்ஏக்களை தங்களுக்கு ஆதரவாக இழுக்க அவர்கள் முயற்சித்துள்ளனர்.

    Advertisement

    தவெக ஆட்சியை கவிழ்க்க எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு பேசியவர்கள் சென்னையில் கிண்டி மற்றும் இசிஆர் ரோட்டில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்கி பிளான் போட்டுள்ளனர். மிகவும் ரகசியமாக இந்த பிளான் போடப்பட்டுள்ளது. இதில் கிண்டி ஓட்டலுக்கான வாடகையை கார்ப்பரேட் நிறுவனம் தான் செலுத்தி உள்ளது. இந்த ஓட்டலில் தங்கி சதித்திட்டம் தீட்டிய பிறகு தான் அவர்கள் தவெகவின் சில எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

    இதில் தவெக எம்எல்ஏக்கள் அவர்களின் பேரத்திற்கு மடியவில்லை. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க முடியாது. இனி எங்களை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கூறிவிட்டனர். இவர்களில் ஊத்தங்கரை சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏ இளையராஜா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகாரளித்தார். திருநாவுக்கரசு என்பவர் தன்னை தொடர்பு கொண்டு ரூ.35 கோடி தருவதாக பேரம் பேசியதாக ஜுன் 29ல் அளித்த புகாரில் தான் தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    Advertisement

    தற்போது செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அவர் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியுள்ளார். அந்த மனுவில், ''அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தன் மீது இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டள்ளது. மாநில அரசை கவிழ்க்கும் திட்டத்திற்கும், தனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இதனால் முன்ஜாமீன் வழங்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

    English Summary

    TVK MLA's Poaching Plot: A total of nine people have been arrested for allegedly conspiring to topple the coalition government led by Tamil Nadu Chief Minister Vijay and his party, TVK. Meanwhile, the police are searching for Ashok Kumar, the brother of Senthil Balaji. Amidst this, a shocking detail has emerged: a corporate company booked rooms for the arrested individuals at a star hotel in Guindy and paid the bill.