தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்!

  • சென்னை: புதிதாக தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம் என்று அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் உறுதி தெரிவித்துள்ளார். தவெகவில் புதிதாக இணைபவர்களிடம் எந்த பாகுபாட்டையும் காட்ட மாட்டோம் என்று கூறிய புஸ்ஸி ஆனந்த், தவெகவினர் புதியவர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    Advertisement

    சட்டசபைத் தேர்தலுக்கு பின் தவெக விஸ்வரூபம் எடுத்துள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியை பிடித்துள்ளதோடு, அக்கட்சியின் கட்டமைப்பையும் வலுப்படுத்தி வருகிறது. ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த 4 சிட்டிங் எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் ஐக்கியமாகி இருக்கின்றனர். இன்று முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இணைந்துள்ளார்.

    Advertisement

    அதேபோல் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநிலச் செயலாளர் கமலக்கண்ணன் இணைந்துள்ளார். இதனால் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா நடைபெற்றது. அதில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏ-க்கள், மாவட்ட, ஒன்றிய, கிளைச் செயலாளர்கள் என பலரும் நம் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

    ஏற்கனவே தவெகவுக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக நம் கட்சியினர் உழைத்து வருகின்றனர். அதனால் புதிதாக வந்தவர்களிடம் எந்த பாகுபாட்டையும் காட்ட மாட்டோம். புதிதாக கட்சியில் இணைந்தவர்களை கைவிடவும் மாட்டோம். புதியவர்களுடன் ஏற்கனவே கட்சியில் இருப்பவர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்.

    Advertisement

    தவெகவினருக்கு லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஊழல் செய்ய மாட்டோம் என்பதை நாங்கள் தெளிவாக தெரிவித்து கொள்கிறோம். ஏன் என்று சொன்னால் ஊழல் செய்தால், அடுத்த நிமிடமே பதவி பறிக்கப்படும். ஊழல் செய்தால், அடுத்த வினாடியே எங்கள் மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுத்துவிடுவார். அதனால் எந்தக் காரணத்தை கொண்டும் ஊழல் செய்ய மாட்டோம்.

    ஊழல் செய்வதற்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. மக்கள் சேவையே எங்களின் நோக்கமாக இருக்கும். நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து நாங்கள் பணியாற்ற போகிறோம். கட்சி நிர்வாகிகள் தொகுதியில் இருக்கும் பிரச்சனையை அமைச்சர்களிடம் கூறுங்கள்.

    Advertisement

    உடனடியாக அந்த பிரச்சனையை அமைச்சர்கள் சரி செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார். இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் சூழலில், அதற்கான பணிகளை தவெக தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாகவே உள்ளூர் மக்களிடையே பிரபலமாக இருக்கும் பல்வேறு தரப்பினரையும் தவெக இணைத்து வருவதாக பார்க்கப்படுகிறது.

    English Summary

    TVK: No Discrimination Against Newcomers says Minister Bussy Bussy Anand Assures Full Support to New Party Inductees