இடைத்தேர்தல் 'ட்விஸ்ட்’.. கம்யூனிஸ்ட் & மார்க்சிஸ்ட் எந்த கூட்டணிக்கும் ஆதரவில்லை.. தனித்துப் போட்டி

  • சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்​பது குறித்து இந்திய கம்​யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்​சிகள் இன்று அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மிகப்பெரிய 'ட்விஸ்ட்’ நடந்துள்ளது. இடைத்தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் ஆதரவு இல்லை, தனித்துப் போட்டி என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.

    Advertisement

    சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்து விட்டு அடுத்தடுத்து தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதிமுகவின் மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

    Advertisement

    இடைத்தேர்தல்

    இதனால், திருச்சி கிழக்குடன் சேர்த்து 7 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தவிர்த்து மற்ற தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருந்ததால், அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதித்தது நீதிமன்றம்.

    இந்நிலையில், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த இரு தொகுதிகளிலும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, ஆளும் தவெக சார்பில், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா போட்டியிடுகிறார்.

    தாராபுரம், மதுராந்தகம்

    திமுக சார்பில், மதுராந்தகம் தொகுதியில், திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் ஐ.பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் எஸ். சுகன்யாவும் நிறுத்தப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில், மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத், தாராபுரம் தொகுதியில் கே.பானுமதி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    Advertisement

    இதற்கிடையே, தவெக ஆட்சியமைப்பதற்கு ஆதரவளித்த காங்கிரஸ், விசிக, ஐ.யூ.எம்.எல் உள்ளிட்ட கட்சிகள் தவெக தலைமையிலான கூட்டணியில் இணைந்து விட்ட நிலையில், இடதுசாரி கட்சிகள் தவெக கூட்டணியில் இன்னும் இணையவில்லை. அண்மையில் நடந்த தவெக கூட்டணி கூட்டத்திற்கு கூட செல்லவில்லை.

    தற்போதைய இடைத்தேர்தலில் சிபிஐ மற்றும் சிபிஐஎம் கட்சிகள் பொதுத்தேர்தலின் போது, கூட்டணியில் இருந்த திமுகவுக்கு ஆதரவளிப்பார்களா? அல்லது தவெக கூட்டணிக்கு ஆதரவளிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கம்​யூனிஸ்ட் கட்​சிகளின் நிலைப்​பாடு என்ன என்​பது பெரும் எதிர்​பார்ப்பை ஏற்படுத்​தி​யுள்​ளது.

    தவெக தரப்​பில் கூட்​ட​ணிக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​ட​போதும் அதில் இணை​யாமல், வெளியி​லிருந்து மட்​டுமே ஆதரவு என தெரி​வித்​ததோடு, மக்​களின் பிரச்​சனை​களை மையப்​படுத்தி அரசுக்கு எதி​ராக தொடர்ச்​சி​யாக குரல் எழுப்பி வரும் கம்​யூனிஸ்ட் கட்​சிகள், இந்த இடைத்​தேர்​தலில் தவெக​வுக்கு ஆதரவு அளிக்​கு​மா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Advertisement

    வரும் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிக்கலாம் என்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் மு. வீரபாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் குழு கூட்டம் நேற்று காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இன்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, அக்கட்சியின் முடிவு அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

    அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் சட்டசபை இடைத்தேர்தலில் என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் நடைபெறும் மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இந்நிலையில் சற்று முன்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், இடதுசாரிகள் இந்தத் தேர்தலை எதிர்கொள்வது என முடிவு செய்துள்ளோம். இடைத்தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் ஆதரவு இல்லை, தனித்துப் போட்டி என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்.

    தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும். மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும். மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக அதன் மாநில செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்." எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    TVK or DMK?: The Communist Party of India (CPI) and the Communist Party of India (Marxist) (CPIM) are set to announce today whom they will support in the by-elections for the Maduranthakam and Dharapuram constituencies.