சென்னை: ஆட்சியைப் பிடித்துவிட்டார் விஜய்.. இனி தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்து விட்டால் அரசியலில் செட்டில் ஆகலாம் என அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அக்கட்சியில் இணைந்தனர். ஆனால் முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பதவிகளும் பொறுப்புகளும் தவெகவில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், சமீபத்தில் அந்த கட்சியில் இணைந்த அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் பரிதவிப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக மிக வேகமாக மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து, பல்வேறு கட்சிகளில் இருந்த முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக அதிமுக, திமுக உள்ளிட்ட பாரம்பரிய கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அனைவருக்கும் உடனடியாக கட்சிப் பொறுப்புகள் வழங்கப்படவில்லை. தேர்தலுக்கு முன்பும், தேர்தலுக்குப் பிறகும் பல்வேறு கட்சிகளில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் இன்னும் கட்சிப் பொறுப்புக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நாள் முதலே, ரசிகர் மன்றத்தில் இருந்து வளர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருந்தார். கட்சியின் ஆரம்ப கட்ட வளர்ச்சியில் உழைத்தவர்களுக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற எண்ணமே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சில விதிவிலக்குகளும் செய்யப்பட்டுள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதிமுகவில் இருந்து வந்த நிர்மல்குமாருக்கு இணைப் பொதுச்செயலாளர் பொறுப்பும், செங்கோட்டையனுக்கு தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டன. இதன் மூலம் வெளியிலிருந்து வந்த சிலருக்கு முக்கிய இடம் கிடைத்தாலும், பெரும்பாலானோர் இன்னும் கட்சிப் பொறுப்புக்காக காத்திருக்கின்றனர். சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டவர்களில் கணிசமான அளவிலானோர் பிற கட்சிகளில் இருந்து வந்தவர்கள். அவர்களில் பலர் வெற்றியும் பெற்றுள்ளனர். இருப்பினும், கட்சி அமைப்பில் நிரந்தர பொறுப்புகள் வழங்கும் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது அமைச்சர்களாக இருக்கும் பலருக்கே கட்சிப் பொறுப்புகள் வழங்கப்படாத சூழல் நிலவுகிறது. சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் அரசுப் பொறுப்பில் இருந்தாலும், கட்சி அமைப்பில் அவர்களுக்கு கட்சி பதவிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் புதியதாக இணைந்தவர்கள் உடனடியாக பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தாலும், அதற்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படும் என கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது 132 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். அதை 160 ஆக உயர்த்தும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாவட்ட அமைப்பை விரிவுபடுத்தி, நீண்ட காலமாக கட்சிக்காக பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கும், புதிதாக இணைந்த முக்கிய பிரமுகர்களுக்கும் பொறுப்புகள் வழங்கும் வகையில் மறுசீரமைப்பு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அதோடு, கட்சியின் பல்வேறு அணிகளிலும் புதிய மாநில அளவிலான பதவிகள் உருவாக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இளைஞரணி, தொழிலாளர் அணி, விவசாய அணி, தொழில்நுட்ப அணி உள்ளிட்ட பிரிவுகளில் புதிய பொறுப்புகள் உருவாக்கப்பட்ட பிறகே மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. எனினும், தற்போது நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களே தமிழக வெற்றிக் கழகத்தின் உடனடி கவனமாக இருப்பதாக தெரிகிறது. திருச்சி கிழக்கு உள்ளிட்ட காலியாக உள்ள தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்வதற்கான பணிகளில் கட்சி தலைமையகம் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக கட்சி அமைப்பு விரிவாக்கம் மற்றும் புதிய பொறுப்புகள் வழங்கும் நடவடிக்கைகள் இடைத்தேர்தலுக்கு பிறகே வேகம் பெறும் என கூறப்படுகிறது. இதனால், அதிமுக, திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பல முக்கிய நிர்வாகிகள், "எப்போது பொறுப்பு கிடைக்கும்?" என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கட்சியில் பெரிய அளவிலான மாற்றங்கள் நிகழலாம் என்றும், அப்போது புதியவர்களுக்கு வாய்ப்புகள் திறக்கப்படலாம் என்றும் பனையூர் வட்டாரங்கள் கூறுகின்றன.தவெக
தவெக நிர்வாகிகள்
கட்சிப் பொறுப்பு
அரசுப் பொறுப்பு
மாவட்டச் செயலாளர்கள்
இளைஞரணி
இடைத்தேர்தல்
புதியவர்களுக்கு வாய்ப்பு