உதயநிதியை டார்கெட் செய்யும் தவெக காவிரிக்காக கப்சிப்! கர்நாடகாவிற்கு பாயிண்ட் எடுத்து தரும் விஜய்

  • சென்னை: எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் நேற்றைய பேச்சு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தஞ்சாவூரில் காவிரி உரிமை தொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் பேசிய சில கருத்துகள் எல்லை தாண்டியதாகவும், கண்ணியமற்ற முறையில் அமைந்ததாகவும் புகார்கள் வைக்கப்படுகின்றன. இதையடுத்து அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    இதனிடையே, உதயநிதி ஸ்டாலின், பெண்களை அவமதித்து விட்டதாக கூறி, தமிழக வெற்றி கழகம் மாநிலம் தழுவிய அளவில் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. உதயநிதியின் பேச்சில் சில விஷயங்கள் நாகரிகமற்றது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், தவெக தற்போது கையிலெடுத்துள்ள இந்தப் போராட்ட முறை பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.

    Advertisement

    குரல் கொடுக்காத தவெக

    தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சனையான காவிரி நீர்ப் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது. இதனால் குறுவை சாகுபடி பொய்த்துப் போய், டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் துயரத்தையும் பொருளாதார இழப்பையும் சந்தித்துள்ளனர். இருப்பினும், காவிரி நீருக்காகவோ அல்லது குறுவை சாகுபடியை இழந்த தமிழக விவசாயிகளுக்காகவோ தவெக எவ்விதப் போராட்டத்தையும் நடத்தவில்லை. கட்சியின் தலைவர் முதல்வர் விஜய்யும் காவிரி உரிமை குறித்து எந்தவொரு வலுவான குரலையும் எழுப்பவில்லை.

    அதுமட்டுமன்றி, கர்நாடகாவில் தமிழர்களுக்கும் தமிழ் திரைப்படங்களுக்கும் எதிராக கன்னட அமைப்புகள் குரல் கொடுத்து, விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் சுவரொட்டிகளைக் கிழித்து எறிந்தபோதும் தவெக அதைக் கண்டித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

    Advertisement

    மாநிலத்தின் உரிமையும், தமிழ் மக்களின் சுயமரியாதையும் பாதிக்கப்பட்டபோது மௌனம் காத்த தவெக, இப்போது ஒரு அரசியல் பேச்சை மட்டும் காரணம் காட்டி மாநிலம் தழுவிய போராட்டத்தில் குதித்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

    வழக்குத் தொடரலாம்

    உதயநிதி ஸ்டாலினின் பேச்சு கண்டிக்கத்தக்கது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஒரு கட்சியின் தலைவரைப் பற்றியோ அல்லது தனிநபர் குறித்தோ அவதூறாகப் பேசும்போது, அதற்கு எதிராகச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பயன்படுத்துவதே சரியான நடைமுறையாகும்.

    தவெகவினர் உதயநிதியின் பேச்சுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம்.. எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யலாம், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். அதற்கு சட்டப்பூர்வமாக எந்தத் தடையும் இல்லை. ஏன் இன்று கைதும் கூட செய்துவிட்டார்கள்.

    Advertisement

    ஆனால், காவிரி பிரச்சனைக்காகத் தெருவில் இறங்கிப் போராடாத ஒரு கட்சி, விஜய்யின் ஜனநாயகன் போஸ்டர்களை கிழித்து படம் ஓடுவதை நிறுத்திய கன்னட அமைப்பினரை கண்டிக்காத ஒரு கட்சி, தனிநபர் விமர்சனத்திற்காக மட்டும் மாநிலம் தழுவி வீதியில் இறங்கிப் போராடுவது வியப்பளிக்கிறது. மக்கள் பிரச்சனையை விடத் தனிநபர் விமர்சனமே முக்கியம் என்ற தோற்றத்தை இது ஏற்படுத்துகிறது.

    கர்நாடகாவிற்கு மறைமுக உதவியா?

    தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டம் என்பது அடிப்படையில் கர்நாடகாவிடம் இருந்து காவிரி நீரையும், விவசாயிகளுக்கான நிவாரணத்தையும் வலியுறுத்தி நடத்தப்பட்ட ஒன்றாகும். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவிரி போராட்டத்தின் மையப் புள்ளியைக் கலைத்து, உதயநிதியின் பேச்சை முதன்மைப் பிரச்சனையாக்குவது, மறைமுகமாகக் கர்நாடக அரசிற்குத் தான் சாதகமாக முடியும். கர்நாடக அரசுக்கு விஜய்யே பாயிண்ட் எடுத்து கொடுப்பது போல ஆகும்.

    Advertisement

    காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவின் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று அம்மாநில உரிமையைப் பாதுகாக்கின்றன. ஆனால், தமிழகத்திலோ காவிரி உரிமைக்காகக் குரல் கொடுக்கும் மேடையில் பேசப்பட்ட ஒரு பேச்சை வைத்து, தமிழர்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்கிறார்கள் என்ற எண்ணத்தையே இது கர்நாடகாவிற்குத் தரும்.

    தமிழர்களின் இந்த உட்கட்சிப் பூசலும், அரசியல் பிளவுகளும் கர்நாடக அரசியல்வாதிகளுக்குச் சிரிப்பையே வரவழைக்கும், தமிழகத்தை கிண்டலாக பார்க்க வைக்கும்.

    காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் அடாவடித்தனத்திற்கு எதிராகத் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நிற்க வேண்டிய சூழலில், தவெகவின் இந்தத் திசைதிருப்பல் அரசியல் மாநில நலனுக்கு உகந்தது அல்ல. தனிநபர் பேச்சைச் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வதே முதிர்ச்சியான அரசியலுக்கு அழகு!

    English Summary

    TVK protest against Udhayanidhi Stalin Speech Controversy: Why Silence on Cauvery Matters?