சிபிஎம், சிபிஎம் குடைச்சல்.. பாமகவை நெருங்கும் தவெக? செளமியா அன்புமணி தந்தைக்கு விருது கொடுத்த விஜய்

  • சென்னை: தகைசால் விருதினை செளமியா அன்புமணியின் தந்தை கிருஷ்ணசாமிக்கு வழங்கியதன் மூலமாக, பாமகவுடன் தவெக நெருக்கம் காட்டி வருவதாக பார்க்கப்படுகிறது. முதல்வர் விஜய்யின் இந்த நடவடிக்கைக்கு பின்னணியில் விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் மீதான நம்பிக்கையின்மையே காரணம் என்றும் முனுமுனுப்புகள் எழுந்துள்ளன.

    Advertisement

    சட்டசபையில் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்ற சூழலில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்தது. இதன்பின் முதல்வரான விஜய் காங்கிரஸ், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தார். சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற மறுத்துவிட்டன.

    Advertisement

    இதனிடையே அதிமுக எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினர். இதன் மூலமாக தவெக விரைவில் தனிப்பெரும்பான்மை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா சம்பவங்கள் நின்றுபோனது. இதனிடையே தவெக ஆட்சி மீது சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறது.

    இன்னொரு பக்கம் விசிக துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் தவெகவை சாடி வருகிறார். இதுதொடர்பாக திருமாவளவனும் அமைதி காத்து வருகிறார். இதன் மூலமாக தவெகவுக்கு எதிரான நரேட்டிவை திமுக செய்ய தொடங்கிவிட்டதாக வியூக வகுப்புக்குழு கணித்துள்ளது. எந்த சூழலிலும் ஆட்சிக்கு பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதில் தவெக தீவிரமாக உள்ளது.

    Advertisement

    இதன் காரணமாகவே கொஞ்சம் கொஞ்சமாக பாமக உடன் தவெக நெருக்கம் காட்டி வருகிறது. பாமக வசம் 4 எம்எல்ஏ-க்கள் இருக்கின்றனர். ஏற்கனவே ஜான் ஆரோக்கியசாமி மூலமாக பாமக உடன் தவெக பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 2016 சட்டசபைத் தேர்தலில் பாமகவுக்காக தேர்தல் பணியாற்றியவர் ஜான் ஆரோக்கியசாமி.

    இதனால் தகைசால் தமிழர் விருதினை ராமதாஸ்க்கு அளிக்க தவெக விரும்பியது. ஆனால் ராமதாஸ் மறுத்துவிட்டதால், அந்த விருது செளமியா அன்புமணியின் தந்தை கிருஷ்ணசாமிக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. பாமக தொடக்கம் முதலே கூட்டணி ஆட்சியில் இணைந்துவிட வேண்டும் என்று ஆர்வம் காட்டியது.

    Advertisement

    அதற்கேற்ப அமைச்சர் ஆனந்தை சந்திக்க அன்புமணி வந்த போது, அவருக்கு பெரிய மரியாதை வழங்கப்பட்டது. இதனை விசிக ரசிக்கவில்லை. அதேபோல் கம்யூனிஸ்ட்டுகளும் ரசிக்கவில்லை. மறுபக்கம் மதுரை மேயர் பதவிக்கு திமுக இதுவரை எந்த கவுன்சிலரையும் நியமிக்கவில்லை. துணை மேயரான சிபிஎம் கட்சியே பொறுப்பு மேயர் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    இதன் காரணமாக கம்யூனிஸ்ட்டுகள் கட்சியினர் லோக்சபா தேர்தலின் போது அணி மாற வாய்ப்பு உள்ளதாக தவெக சந்தேகம் கொண்டுள்ளது. முதல்வர் விஜய்யும் கம்யூனிஸ்ட்டுகள் கொடுத்த ஆதரவில் நம்பிக்கை கொள்ளவில்லை. இதனால் பாமக உடன் நெருக்கம் காட்டி வருவதாக தவெகவினர் மத்தியில் முனுமுனுப்புகள் எழுந்துள்ளன.

    English Summary

    TVK Reaching Out to PMK Amid Distrust in VCK and Left Allies, Political Calculations Behind CM Vijay Move