சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஊராட்சித் தலைவரும், தவெக நிர்வாகியுமான வீராசாமி ஒப்பந்ததாரர் ஒருவரிடம் இருந்து லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், வீராசாமியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் பொறுப்புகளிலிருந்து நீக்கி கட்சி தலைமை அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் ஊராட்சித் தலைவரும், தவெக நிர்வாகியுமான வீராசாமி ஒப்பந்ததாரரிடமிருந்து பணம் வாங்குவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வீராசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், எனது பெயரையும் முதல்வர் பெயரையும் கெடுக்கும் வகையில் சிலர் செயல்பட்டு வருகின்றனர். நான் லஞ்சமாக வாங்கவில்லை. அந்தப் பணம் நான் கைமாத்தாக கொடுத்தது. ஒப்பந்ததாரருக்கு அனுமதி வழங்க என்னிடம் எந்த அதிகாரமும் இல்லை. நான் லஞ்சம் வாங்க வேண்டிய அவசியமும் இல்லை. அப்படியே வாங்க வேண்டும் என்றாலும் நான் ஏன் எனது எண்ணிலும், அலுவலகத்திலும் வைத்து வாங்கப் போகிறேன் என்று லஞ்சம் வாங்கவில்லை என்று கூறி மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் நடந்துகொண்டதாகக் கூறி, வீராசாமியை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலர் தினகரன் அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டிருந்த அறிவிப்பில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளராக பதவி வகித்து வந்த வீரா [எ] வீராசாமி இன்று முதல் கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் மற்றும் பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுகின்றார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.