தவெக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் சர்ச்சை.. தேர்தலை கேலிக்கூத்து ஆக்குவதா? வெகுண்டெழுந்த பாஜக!

  • சென்னை: பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களை நட்சத்திர பேச்சாளர்களாக தவெக கொடுத்துள்ள பட்டியல் தேர்தல் நடத்தை விதிகளை கேலிக் கூத்தாக்கும் செயல், தேர்தல் ஆணையம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக, தவெக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் என 5 முனை போட்டி நிலவுகிறது. தமிழக வெற்றி கழகம் சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் சத்யபாமா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 40 பேர் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் தொடங்கி மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி தலைவர்கள் பலரது பெயரும் இடம் பெற்றுள்ளது. முதல்வர் ஜோசப் விஜய், காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மதிமுக எம்.பி துரை வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விசிக எம்.பி ரவிக்குமார், சிந்தனை செல்வன் உள்ளிட்ட 40 பேருக்கு தமிழக வெற்றிக் கழகம் எனக் குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

    Advertisement

    மற்ற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களை தவெக எனக் குறிப்பிட்டு ஸ்டார் பேச்சாளர்கள் பட்டியலை தவெக சமர்ப்பித்து, தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்றுள்ளதற்கு தமிழக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து கராத்தே தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் பிரச்சாரம் செய்வதற்காக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் - CEO TN, வெளியிட்டுள்ளது. இந்த நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் தமிழக வெற்றிக்கழகத்தினுடைய நட்சத்திர பேச்சாளர்களாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உடன் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காதர் மொகிதீன், விசிக கட்சியைச் சார்ந்த ரவிக்குமார் எம்.ப், வன்னியரசு மற்றும் சிந்தனை செல்வன் போன்ற பிற கட்சிகளின் தலைவர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

    Advertisement

    நட்சத்திர பேச்சாளர்களை பொருத்தவரை அந்தந்த கட்சியை சார்ந்த தலைவர்களை மட்டுமே நட்சத்திர பேச்சாளர்களாக அறிவிக்க முடியும் என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தினுடைய பிரிவு 77 ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இப்படி சட்டத்தினுடைய பிரிவு தெளிவாக குறிப்பிட்டு இருக்கும்போது, தமிழக தேர்தல் ஆணையம் - CEO TN, தவெக கொடுத்துள்ள 40 பேர் கொண்ட நட்சத்திர வேட்பாளர் பட்டியலில் பிற கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய பேர்களைக் கொண்ட அந்த பட்டியலை தமிழக வெற்றி கழகத்தின் நட்சத்திர பேச்சாளர்களாக அங்கீகரித்துள்ளது இது தமிழக தேர்தல் ஆணையம் - CEO TN மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கேலிக்கூத்தாக்கும் செயலாக உள்ளது.

    Advertisement

    சட்டத்தின்படி நடக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தையும் சட்டத்தையும் கேலிக்கூத்தாக்கி ஆளும் கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் நடைபெறக்கூடிய மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறுமா என்ற கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே இதே போன்று ஆம் ஆத்மி கட்சி அதன் உறுப்பினர் அல்லாதவரை நட்சத்திர வேட்பாளராக அறிவித்த விவகாரத்தில் சர்ச்சை எழுந்து, பிறகு கட்சியின் உறுப்பினர் அல்லாதவர் நட்சத்திர பேச்சாளராக இருக்க முடியாது என்ற நிலை உருவானது. எனவே உடனடியாக தமிழக தேர்தல் ஆணையம் - CEO TN தமிழக வெற்றி கழகத்திற்கு 2026 மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக தமிழக வெற்றிக் கழகத்திற்கு அங்கீகரித்துள்ள நட்சத்திர பேச்சாளர் பட்டியலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    English Summary

    BJP State Secretary Karate Thiagarajan has urged the Election Commission to take immediate action, stating that the list of 'star campaigner' released by TVK—which includes members from other parties—makes a mockery of the Model Code of Conduct.