சென்னை திட்டங்களை மொத்தமாக முடக்கிய தவெக.. சேகர்பாபு பரபரப்பு புகார்

  • சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிகளை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. தவெக தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திமுக தவெக இடையே கடுமையான மோதல் உருவாகி வருகிறது. திமுக திட்டங்களை தவெக முடக்குவதாகவும், பெயர்களை மாற்றுவதாகவும் புகார் கூறி வருகிறார்கள். சென்னையை மேம்படுத்தும் ரூ.800 கோடி திட்டத்தை தவெக முடக்கியுள்ளதாக சேகர்பாபு பரபரப்பு புகாரை கூறியுள்ளார்.

    Advertisement

    சென்னையில் திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்த துறையில் நடைபெறும் அனைத்து விரும்ப தகாத நிகழ்வுகளையும் சட்டமன்ற மானிய கோரிக்கையில் தெளிவாக எடுத்துரைப்போம். 100 நாட்கள் என்று திட்டமிட்டுள்ளோம். சென்னையை பொறுத்தவரை வளர்ச்சி திட்டங்களுக்காக எங்கள் ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மூலம் ரூ.800 கோடிக்கு மேலான வளர்ச்சி பணிகளை தவெக ஆட்சியில் ரத்து செய்துள்ளனர்.

    Advertisement

    திட்டங்கள் ரத்து

    ரத்து செய்த பணிகளை மக்களின் தேவைக்கு இன்றியமையாதது. எனவே அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வெகு விரைவில் அந்த பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். எங்கள் தலைவர் கொண்டு வந்த வட சென்னை திட்டத்தை முழுமையாக இன்றைக்கு முடக்கியுள்ளனர். அந்த ஒவ்வொரு திட்டமும் ஏழை எளிய மக்களுடைய அன்றாட வாழ்வில் பின்னி பிணைந்துள்ள திட்டங்கள். நிதி நெருக்கடியை காரணம் காட்டி அதை நிறுத்தி வைத்துள்ளனர்.

    கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் திமுகவுக்கும், எங்கள் தலைவருக்கும் புகழ் சேர்க்கும் திட்டங்கள். நூலகங்கள், படைப்பகங்கள், விளையாட்டு மைதானங்கள், கூடங்கள், கழிவு நீர் ஏற்று மையங்கள், மின்சார திட்டங்கள், பூங்கா உள்ளிட்ட பல்வேறு மக்கள் பணிக்கு தடை ஏற்படுத்தியுள்ளனர். இவை அனைத்தும் மக்கள் வளர்ச்சிக்கான பணிகள். எனவே இந்த ஆட்சியில் அந்த திட்டங்களை தொடர வேண்டும்.

    Advertisement

    கல்வெட்டுகள் அகற்றம்

    நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் பெயர்களையும் மாற்றியுள்ளனர். காழ்புணர்ச்சி காரணமாக இவ்வாறு செய்கிறார்கள். மக்கள் அனைத்தையும் உற்று கவனித்து வருகிறார்கள். எங்கள் ஆட்சியில் துணை முதலமைச்சர் திறந்து வைத்த திட்டங்களின் கல்வெட்டுகளை அகற்றி வருகிறார்கள். அதேபோல ராயபுரம் மண்டலம் 5 எதிரில் உள்ள முதலமைச்சர் திருமண
    மாளிகையில் பதித்த 2 கல்வெட்டுகளை அகற்றியுள்ளனர்.

    கல்வெட்டுகளை அகற்றுவதால் எங்கள் தலைவரின் புகழை மறைக்க முடியாது. கல்வெட்டுகளை வேண்டுமானால் அகற்றலாம். மக்களின் மனம் என்கிற சிம்மாசனத்தில் எங்கள் தலைவரின் பெயரை எதை வைத்து அகற்றுவார்கள். இதை மக்கள் உற்று கவனித்து வருகிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். உரிய நேரத்தில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்" என்றார்.

    English Summary

    DMK Former Minister Sekarbabu said, TVK Government stopped Rs 800 scheme on Chennai development due to political reason.