ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்!

  • சென்னை: தவெகவில் இத்தனை நாட்களாக அதிமுகவின் முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மட்டும் இணைந்து வந்த சூழலில், தற்போது ஆபரேஷன் இரட்டை இலையை கையில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாவட்ட வாரியாக இருக்கும் நிர்வாகிகள், தலைவர்களை தவெக பக்கம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மதுராந்தகம் பகுதி அதிமுகவை தவெக பக்கம் கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    Advertisement

    தவெகவை தொடக்கம் முதலே அதிமுக போன்ற ஒரு கட்சியாக உருவாக்க வேண்டும் என்று விஜய் நினைத்திருந்தார். இதனால் பலரும் விஜய்யை இதற்கு நேரடியாகவே அதிமுகவில் இணைந்திருக்கலாம் என்று விமர்சித்து வந்தனர். தற்போது ஆட்சிக்கு வந்த பின், தவெகவை அதிமுகவாக மாற்றும் திட்டத்தை விரைவாக அரங்கேற்றி வருகிறார். ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிமுக தலைவர்கள் தவெகவில் இணைந்து வருகின்றனர்.

    Advertisement

    ஆனாலும் அதிமுகவின் அடித்தளம் இன்னும் அப்படியே தான் இருக்கிறது. ஏனென்றால் அதிமுக பலமாக இருப்பதற்கு அக்கட்சியின் ஒன்றியம், நகரம், கிளை வரை இருக்கும் நிர்வாகிகள் தான். அவர்களை தவெக பக்கம் கொண்டு வர தவெக தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. இதன் காரணமாகவே முதற்கட்டமாக மாவட்ட வாரியாக அதிமுக தலைவர்களை பனையூரில் வைத்து தவெகவில் இணைத்து வருகிறது.

    இதன்பின் தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள் மூலமாகவே ஒவ்வொரு ஊரிலும் இருந்து நிர்வாகிகளை தவெக பக்கம் இழுக்க திட்டமிடப்பட்டு வருகிறது. அதற்கேற்ப உள்ளாட்சித் தேர்தலும் நெருங்கி வருவதால், தவெகவுக்கு களமும் சாதகமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. இத்தனை நாட்களாக பனையூரில் மட்டும் நடந்த இணைப்பு விழாக்கள் இனி மாவட்ட வாரியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    Advertisement

    இது அதிமுகவை இன்னும் பலவீனமாக மாற்றுவதோடு, உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தவெகவால் பெற முடியும் என்று பனையூர் வியூக தரப்பு நம்புகிறது. அதன்படி முதற்கட்டமாக மதுராந்தகத்தில் இணைப்பு விழா நடக்கவுள்ளது. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்த மரகதம் குமரவேல் மூலமாக ஆபரேஷன் இரட்டை இலை தொடங்கப்பட்டுள்ளது.

    சென்னையை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமான அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணையவுள்ளனர். இதேபோல் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், சம்பத், இசக்கி சுப்பையா, விஜயதரணி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளும் அவரவர் பகுதிகளில் இருந்து நிர்வாகிகளை இழுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    English Summary

    TVK: Targeting Maduranthakam First, TVK Launches Massive ‘Operation Twin Leaves’ to Poach AIADMK Strongholds