சென்னை: எதை சொன்னாலும் டிரால் செய்கிறார்கள்.. அதனால் மனசு கஷ்டமா இருக்கு என்று போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். பேருந்துகளில் நடத்துநர்கள் பெண்களை மரியாதையுடன் நடத்த அறிவுறுத்தி உள்ளதாக கூறிய தமிழன் பார்த்திபன், பயணிகளிடம் இருந்து வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்தை விரிவாக்கம் செய்து முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த விஜய், பின்னர் பேருந்தில் ஏறி பெண்களுக்கு டிக்கெட்டுகளை வழங்கினார். தமிழ்நாடு முழுவதும் 12,695 பேருந்துகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலமாக லட்சக்கணக்கான பெண்கள் பயன் அடைய உள்ளனர்.
இருப்பினும் விடுமுறை நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லாமல் பயணிகள் தவிக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல பயணிகள் நள்ளிரவு வரை காத்திருக்கும் நிலை உள்ளது. அதேபோல் ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளையை தடுக்க தவெக அரசு தவறி வருவதாகவும் விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. அதேபோல் அமைச்சர் தமிழன் பார்த்திபன் ஆய்வு மேற்கொள்வதிலும் சில சறுக்கல்களை சந்தித்து வருகிறார். ஆய்வின் போது பொதுமக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார். ஏதாவது ஒரு பதிலை சொல்லலாம் என்று தமிழன் பார்த்திபன் சொல்லும் பதில்களும், சோசியல் மீடியாவில் டிரால் மெட்டீரியலாக மாறி வருகின்றன. இந்த நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மகளிருக்கான இலவச பயணத் திட்டத்தை விரிவாக்கம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் தமிழன் பார்த்திபன் பேசுகையில், நடத்துநர்கள் பயணிகளை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். மக்களிடம் இருந்து வரும் புகார்கள், செய்தியாளர்களிடம் இருந்து வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால் எதை சொன்னாலும் டிரால் பண்றாங்க.. அது மனசு சங்கடா இருக்கு.. செயலாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்கிறார்கள். பண்டிகை காலங்களில் 3 ஆயிரம் பேருந்துகளை ஒரே இடத்தில் நிறுத்த முடியுமா? சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, நெல்லைக்கு என்று கொஞ்சம் கொஞ்சமாக தான் பேருந்துகளை ஒதுக்கி நிறுத்த முடியும். பெருங்கூட்டமாக மக்கள் நிற்கும் போது, சீட் பிடிக்க முந்தி அடிக்கிறார்கள். அதனை வீடியோ எடுத்து கூட்டம் என்று சொல்கிறார்கள். நேற்றிரவு கிளாம்பாக்கத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த திட்டம் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே அறிவிக்கப்பட்ட திட்டம் தான். அதனால் எந்த சிக்கலும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.