நிலாவைக் காட்டி சோறூட்டுற மாதிரி.. விஜய்யை காட்டிய ஆதவ்! ஜான் போட்ட ’வார் ரூம்’ கணக்கு! பக்கா ப்ளான்!

  • சென்னை: 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்தது, தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக திமுக - அதிமுக என இரு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்த அரசியல் களத்தில், நடிகர் விஜய் தலைமையிலான தவெக மிகக் குறுகிய காலத்தில் ஆட்சியை கைப்பற்றியது எப்படி என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. தற்போது, தவெகவின் வெற்றிக்குப் பின்னால் செயல்பட்ட "வார் ரூம்" அரசியல் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்த பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை எட்ட முடியவில்லை. இருப்பினும், காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வராக பதவியேற்றார்.

    Advertisement

    தேர்தல் முடிவுகள் வெளியாகிய தருணத்திலிருந்தே, "இத்தனை விரைவில் தவெக எப்படி இத்தகைய வெற்றியைப் பெற்றது?" என்ற விவாதம் அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, தவெகவின் தொழில்நுட்ப அடிப்படையிலான தேர்தல் திட்டமிடல் என கூறப்படுகிறது.

    ஆதவ் அர்ஜுனா

    குறிப்பாக, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்குச் சொந்தமான "வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்" அலுவலகத்தில்தான் தவெகவின் முக்கிய வார் ரூம் செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வார் ரூமில் கபில் சாகு தலைமையில் சுமார் 40 பேர் கொண்ட இளம் ஆய்வாளர்கள் குழு பணியாற்றியதாக கூறப்படுகிறது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த குழுவில் இருந்த அனைவரும் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்தான்.

    Advertisement

    தேர்தல் வியூகம்

    இந்த குழு கடந்த பல மாதங்களாக 234 தொகுதிகளிலும் அமைதியாக களப்பணியில் ஈடுபட்டிருக்கிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட பெரிய கட்சிகளில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல்கள், அதிருப்தி, மாவட்ட அளவிலான பிரிவினைகள் போன்ற தகவல்கள் முறையாக சேகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியை தவெக மிகத் திட்டமிட்ட முறையில் அரசியல் வாய்ப்பாக மாற்றியதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

    வேட்பாளர் தேர்வு

    அதிமுகவில் அதிருப்தியில் இருந்த நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் தலைவர்கள் யார், எந்த தொகுதியில் கட்சிக்கு எதிராக மனநிலை உள்ளது, எந்த இடங்களில் மாற்று வாக்கு உருவாகும் என்றெல்லாம் விரிவான ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. அதன்பிறகே வேட்பாளர் தேர்வு முதல் பிரசார உத்திகள் வரை அனைத்தும் திட்டமிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    ஜான் ஆரோக்கியசாமி

    தவெகவின் சமூக ஊடக பிரசாரமும் இந்த தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பேஸ்புக், எக்ஸ், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இளைஞர்களை குறிவைத்து தனி டிஜிட்டல் பிரசாரம் நடத்தப்பட்டது. இந்த சமூக ஊடக பிரசாரங்களை மட்டுமல்லாமல், விஜயின் அரசியல் உரைகளையும் ஜான் ஆரோக்கியசாமி தலைமையிலான குழுவே வடிவமைத்ததாக கூறப்படுகிறது.

    தூயசக்தி

    விஜய் பேசும் வார்த்தைகள், தாக்கம் ஏற்படுத்தும் வரிகள், பொதுமக்கள் மனநிலைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட அரசியல் மெசேஜ்கள் என அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. "தூயசக்தி", "மாற்று அரசியல்", "இளைஞர்களின் ஆட்சி" போன்ற கோஷங்கள் திட்டமிட்ட அரசியல் பிராண்டிங்காக உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    Advertisement

    ஜெகதீஷ் பழனிசாமி

    அதேபோல், விஜயின் வாகனப் பிரசாரத்தை ஜெகதீஷ் பழனிசாமி தலைமையிலான குழு முழுமையாக ஒருங்கிணைத்துள்ளது. எந்த மாவட்டத்தில் எப்போது விஜய் செல்ல வேண்டும், எந்த இடத்தில் கூட்டம் நடத்த வேண்டும், எங்கு குறைவாக தோன்ற வேண்டும் என்பதுவரை திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    கரூர் சம்பவம்

    இதில் மிக முக்கியமான விஷயம், "விஜய் பொதுவெளியில் அதிகமாக தோன்றக்கூடாது" என்ற அரசியல் கணக்குதான். கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் அதிகம் வெளியே வராதது, எதிர்க்கட்சிகள் அவரை குறைத்து மதிப்பிட வழிவகுத்ததாகவும், அதையே தவெக தனது அரசியல் பலமாக மாற்றியதாகவும் கூறப்படுகிறது.

    கருத்துக்கணிப்புகள்

    கருத்துக்கணிப்புகள் பலவும் தவெகவுக்கு முழுமையான வெற்றியை கணிக்காத சூழலிலும், விஜய், ஆதவ் அர்ஜுனா மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் "நிச்சயம் ஆட்சி அமைப்போம்" என்ற நம்பிக்கையிலேயே இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வெளியாகும் இந்த தகவல்கள், தவெகவின் வெற்றி வெறும் நடிகர் விஜயின் பிரபலத்தால் மட்டுமல்ல, பின்னணியில் மிகவும் திட்டமிட்ட அரசியல் மற்றும் தொழில்நுட்ப வியூகங்களால் சாத்தியமானது என்பதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

    English Summary

    Reports reveal how TVK’s digital war room and strategic planning powered Vijay’s rise to power in Tamil Nadu.