சென்னை: தவெக பெண் வக்கீல் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.. அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் லட்சக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சில நாட்களிலேயே, பெண் வழக்கறிஞர் ஒருவர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கும் விவகாரம் இப்போது அரசியல் வட்டாரங்களில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது.. என்ன நடந்தது?
தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களை நியமிப்பது தொடர்பாக தமிழக அரசு கடந்த ஜூன் 5ம் தேதி அதிகாரப்பூர்வ அரசாணை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஞானசவுந்தரி, தான் ஒரு வழக்கறிஞர் என்ற முறையிலும், தவெக கட்சியின் உறுப்பினர் என்ற அடிப்படையிலும் அந்தப் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். இந்தச் சூழலில்தான், நீதிமன்றங்களில் நியமிக்கப்படவுள்ள அரசு வழக்கறிஞர்களின் உத்தேசப் பட்டியல் சோஷியல் மீடியாவில் கசிந்து பரவத் தொடங்கியது. அந்த லிஸ்ட்டில் தனது பெயர் இடம் பெறாததை அறிந்து அதிர்ச்சியடைந்த ஞானசவுந்தரி, இது குறித்து தவெக மாவட்டச் செயலாளரிடம் முறையிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மேற்கொண்ட விசாரணையில், தமிழகம் முழுவதும் அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதற்கு 5 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை அமைச்சர்கள் மற்றும் தவெக கட்சி நிர்வாகிகள் தரப்பில் லஞ்சம் பெறப்பட்டதாகக் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. இதனை சட்டப்பூர்வமாக எதிர்க்க முடிவெடுத்த ஞானசவுந்தரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களை நியமிப்பது தொடர்பாக தமிழக அரசு கடந்த ஜூன் 5ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. அதன்படி, பட்டியல் இனத்தைச் சேர்ந்த நானும் தவெக வழக்கறிஞர் என்ற முறையில் விண்ணப்பித்தேன். ஆனால் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பான பட்டியல் சமூக வலைத்தளங்களில் பரவியது. அந்தப் பட்டியலில் எனது பெயர் இல்லை என்பதையறிந்து அது தொடர்பாக தவெக மாவட்டச் செயலாளரிடம் முறையிட்டேன். இதுகுறித்து விசாரித்தபோது, அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை தவெக அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் லஞ்சம் பெற்றிருப்பது தெரியவந்தது. எனவே, தமிழகம் முழுவதும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் நடைபெறும் முறைகேடு தொடர்பாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். தகுதியானவர்களை இப்பதவிகளுக்கு நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். என்னை விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வழக்கறிஞராக நியமிக்கவும், அதுவரை அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கும், அது தொடர்பான அறிவிப்பாணைக்கும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்" இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், விழுப்புரம், வானூர், திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கான 20 பேர் கொண்ட அதிகாரப்பூர்வ அரசு வழக்கறிஞர்கள் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது. இந்த இறுதிப் பட்டியலிலும் ஞானசவுந்தரியின் பெயர் இடம் பெறவில்லை. வழக்குத் தொடுக்கப்பட்டு பல நாட்களாகியும் கட்சித் தலைமை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த நிலையில், இந்த அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியான மறுநாளே ஞானசவுந்தரி மீது தவெக கட்சி நிர்வாகம் பாய்ந்துள்ளது. ஆன்லைன் முறை மூலமாக கட்சியில் உறுப்பினராக இணைந்த ஞானசவுந்தரி, அரசியல் எதிரிகளுடன் கைகோர்த்துக்கொண்டு கட்சிக்கு எதிராகப் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, கட்சியின் கொள்கைகள், ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்டதன் காரணமாக, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக நீக்குவதாக தவெக மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் ஊழல் என நீதிமன்றம் சென்ற பெண் வழக்கறிஞர், பட்டியல் வெளியான அடுத்த 24 மணி நேரத்திற்குள் கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்ட இந்த விவகாரம் விழுப்புரம் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் தற்போதும் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் நீடிக்கச் செய்துள்ளது.அரசு வழக்கறிஞர்களின் உத்தேச பட்டியல
தவெக ஞானசவுந்தரி
லிஸ்ட்டில் பெயர் இல்லை
மறுநாளே தவெக ஆக்ஷன்
மா.செ. மோகன்ராஜ் அதிரடி