டாஸ்மாக்கை மூடிட்டு.. பக்கத்துலயே திறப்பதுதான் மாற்றமா.. தோலுரிக்கும் மக்கள்! வைரல் இன்ஸ்ட்டா ரீல்ஸ்

  • சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகளில் மிக முக்கியமானது.. பள்ளிகள், கோயில்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருக்கும் 717 டாஸ்மாக் கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட வேண்டும் என்ற உத்தரவு.

    Advertisement

    "மதுவற்ற தமிழகம்" நோக்கிய முதல் படி என தவெக தொண்டர்களால் இது கொண்டாடப்பட்டாலும், தற்போதைய கள நிலவரம் புதிய அரசுக்கு பெரும் சவாலாகவும், பொதுமக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை எழுப்பும் விஷயமாகவும் மாறியுள்ளது.

    Advertisement

    வெறும் சில மீட்டர்கள் தள்ளி மறுபடியும் திறப்பா?

    அரசு உத்தரவுப்படி சில குறிப்பிட்ட கடைகள் மூடப்பட்டதாகக் கணக்கு காட்டப்பட்டாலும், "அதே கடையை வெறும் 300 முதல் 400 மீட்டர் தள்ளி வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்கிறார்கள்" என்ற பரபரப்புப் புகார் தற்போது எழுந்துள்ளது.

    சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Instagram Reels), எக்ஸ் (X) தளம் மற்றும் ஃபேஸ்புக்கில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு வருகின்றனர். ஒரு தெருவில் மூடப்பட்ட கடை, அதே தெருவில் வேறு இடத்திலோ.. அடுத்த தெருவிலோ அல்லது அதே வார்டுக்குள் சில நூறு மீட்டர்கள் தள்ளியோ எவ்வித தடையுமின்றி மீண்டும் திறக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    Advertisement

    "பள்ளிக்கு அருகில் இருந்த கடையை மூடிவிட்டு, குடியிருப்புப் பகுதிக்குள் மாற்றுவதால் என்ன பயன்? இது வெறும் கண்துடைப்பு அரசியல்" என்று ரீல்ஸ் வீடியோக்களில் பொதுமக்கள் தங்கள் குமுறல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

    பிரைவேட் பார் (Private Bar) கலாச்சாரம்:

    மறுபுறம், அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட சில பகுதிகளில், அதற்கு மாற்றாக தனியார் பார்கள் (Private Bars) அல்லது கிளப்புகள் மிகத் தீவிரமாகத் தழைத்தோங்கத் துவங்கியுள்ளதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகின்றனர். டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடை மூடப்பட்டாலும், சட்டவிரோத மது விற்பனையும், ரகசிய பார்களின் ஆதிக்கமும் குறையவில்லை என்பதே கள நிலவரமாக உள்ளது.

    Advertisement

    'இதுதான் நீங்க சொன்ன மாற்றமா?' எழும் கேள்விகள்!

    தேர்தல் களத்தில் தவெக கொடுத்த வாக்குறுதிகளையும், தற்போதைய செயல்பாடுகளையும் ஒப்பிட்டு, சமூக வலைதளங்களில் கடுமையான விவாதங்கள் எழுந்துள்ளன.

    பெயரளவில் மட்டும்தான் மாற்றமா? 717 கடைகளை மூடுவது என்ற எண்ணிக்கையைத் தாண்டி, ஒட்டுமொத்த மது நுகர்வைக் குறைக்கவோ அல்லது மதுவினால் ஏற்படும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தவோ இந்த இடமாற்றங்கள் உதவாது என்ற அதிருப்தி எழுந்துள்ளது.

    மக்களின் கேள்வி

    "விஜய் அரசு கொண்டு வருவோம் என்று சொன்ன அந்தப் 'பெரிய மாற்றம்' இதுதானா? கடைகளின் முகவரியை மாற்றுவதுதான் நிர்வாகச் சீர்திருத்தமா?" என்று நடுநிலையாளர்களும், எதிர்க்கட்சியினரும் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

    Advertisement

    10 மணி கெடுவும், கள்ளச்சந்தையும்

    ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் 'இரவு 10 மணிக்குள் டாஸ்மாக் மூடப்பட வேண்டும்' என்ற விதியை மீண்டும் அறிவிப்பது போன்று அறிவித்து.. அதை கடுமையாக்குவதாக அரசு கூறினாலும், பெட்டிக்கடைகளிலும், பார்களின் பின்புறங்களிலும் நள்ளிரவிலும் மது தாராளமாகக் கிடைப்பதாக புகார்கள் வைக்கப்படுகிட்னரான.

    அரசுக்கு இருக்கும் சவால்கள்:

    ஆண்டுக்கு 48,000 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் ஈட்டித் தரும் டாஸ்மாக் துறையை ஒரே நாளில் முடக்குவது பொருளாதார ரீதியாக அரசுக்குச் சாத்தியமில்லை என்பதை நிர்வாகத் தரப்பு உணர்ந்துள்ளது. அதே நேரத்தில், தங்களுக்கு வாக்களித்த பெண் வாக்காளர்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயமும் முதலமைச்சர் விஜய்க்கு இருக்கிறது.

    Advertisement

    அரசாணை வெளியிடுவது மிக எளிது. ஆனால், அதை அடிமட்ட அளவில் அதிகாரிகள் எப்படி அமல்படுத்துகிறார்கள் என்பதைக் கண்காணிப்பதே உண்மையான சவால். இடமாற்றம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் அதிகாரிகளையும், விதிமீறலில் ஈடுபடும் டாஸ்மாக் ஊழியர்களையும் அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவில்லை என்றால், இந்த 717 கடைகள் மூடல் என்பது வெறும் 'அரசியல் விளம்பரமாக' மட்டுமே எஞ்சும் என்பதில் ஐயமில்லை.

    English Summary

    TVK's TASMAC Ban Reality Check: Relocation of Closed Shops Triggers Public Outrage in Tamil Nadu