சென்னை: பாஜக பெண் நிர்வாகி அலிசா அப்துல்லாவுக்கு எதிராக அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாக எழுந்த புகாரில் அரசியல் விமர்சகர் திருச்சி சூர்யா மற்றும் யூடியூபர் முக்தார் அகமது ஆகியோர் மீது 'குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதனிடையே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து திருச்சி சூர்யா, யூடியூபர் முக்தார் அகமது ஆகிய இருவரது தரப்பினலும் இரண்டு ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளனர். இந்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் இன்று விசாரிக்கிறார்கள்.
தமிழ்நாடு பா.ஜ.க-வில் இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளராக அலிசா அப்துல்லா பொறுப்பு வகித்து வருகிறார். பிரபல கார்-பைக் ரேசரான இவர் யூடியூப் பிரபலமாகவும் அறியப்படுகிறார். அலிசா அப்துல்லா, கடந்த ஜூன் 3-ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், யூடியூபர் முக்தார், முன்னாள் பா.ஜ.க நிர்வாகியான திருச்சி சூர்யா ஆகியோர் தன்னை பற்றியும், தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை பற்றியும் மிகவும் அவதூறாக பேசியதாக குறிப்பிட்டு இருந்தார். மேலும், பெண்கள் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வருவதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
இந்த புகாரின் அடிப்படையில், சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தகவல் தொழில்நுட்ப சட்டம், அவதூறு பரப்புதல், பெண்ணின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் காவல் துறையினர், அலிசா புகார் அளித்த மறுநாளே சூர்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். முக்தாரை தீவிரமாக தேடி வந்தனர். அவரை ஜூன் 9 அன்று கர்நாடக மாநிலத்தில் வைத்து கைது செய்த சைபர் கிரைம் போலீசார், அவரை சென்னை அழைத்து வந்து விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இருவர் மீது பல்வேறு புகார்கள் உள்ளதால், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் பரிந்துரையின் பெயரில் குண்டர் சட்டத்திற்கான ஆணையை சென்னை மாநகர காவல் ஆணையர் பிறப்பித்தார். குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதால், இவர்களால் ஒரு ஆண்டுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாது என்கிற நிலையில், குண்டர் சட்டம் போட்டதே தவறு என்று நிரூபித்து அதனை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும். அப்படி அணுகி வென்றால் தான் ஜாமீன் பெற முடியும். பொதுவாக குண்டர் சட்டத்தால் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யவேண்டும். அந்த வகையில் அரசியல் விமர்சகர் திருச்சி சூர்யா மற்றும் யூடியூபர் முக்தார் அகமது ஆகியோரின் குடும்பத்தினர் தரப்பில் இரண்டு ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் இன்று விசாரிக்கிறார்கள். இதனிடையே யூடியூபர் முக்தார் மீது இரண்டு கிரிமனல் வழக்குகள் போடப்பட்டுள்ளதாம்.ஒன்று பாஜக நிர்வாகி தொடர்பானது. இன்னொரு வழக்கும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.