உதயநிதி ஸ்டாலின் கைது.. அப்செட் ஆன கிச்சன் கேபினெட்.. இடையில் நடந்த ஷாக் சம்பவம்!

  • சென்னை: எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் அரசியல் களம் பெரும் பரபரப்பை எட்டியுள்ளது.

    Advertisement

    உதயநிதி கைதை எதிர்த்து இன்று காலை சென்னை முதல் தஞ்சாவூர் வரை பெரும் திரளாகக் கூடி, அரசுக்கும் காவல்துறைக்கும் எதிராகக் காரசாரமான போராட்டங்களை முன்னெடுக்குமாறு திமுக தலைமை மாவட்ட நிர்வாகிகளுக்கு அவசர உத்தரவு பிறப்பித்திருந்தது.

    Advertisement

    காலை 11 மணிக்கெல்லாம் அறிவாலயத்தில் இருந்து பறந்த இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, ஆங்காங்கே திமுக உடன்பிறப்புகள் மற்றும் நிர்வாகிகள் களத்தில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்த போராட்டங்களின் பின்னணியில் உள்ள கள நிலவரம், திமுகவின் 'கிச்சன் கேபினெட்' அதிருப்தி மற்றும் தொண்டர்களின் தற்போதைய மனநிலை குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அறிவாலயத்தின் உத்தரவும், எதிர்பாராத கூட்ட நெரிசலின்மையும்

    உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட செய்தி வெளியான உடனேயே, திமுக தலைமையான அறிவாலயத்தில் இருந்து மாவட்ட செயலாளர்களுக்கும் இரண்டாம் நிலை நிர்வாகிகளுக்கும் உடனடி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக, சென்னை முதல் தஞ்சாவூர் வரை அவர் கொண்டு செல்லப்படும் வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு, தவெக அரசுக்கும் காவல்துறைக்கும் எதிரான தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்பதே தலைமை இட்ட கட்டளையாக இருந்தது.

    Advertisement

    அதன்பேரில், சாலை மறியல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் கட்சியினர் குதித்தனர். ஆனால், போராட்டம் நடந்தபோதிலும், கட்சித் தலைமை எதிர்பார்த்த அளவிலான பிரம்மாண்ட கூட்டமோ அல்லது தொண்டர் கூட்டமோ பல இடங்களில் தென்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தத் தகவல் உடனுக்குடன் அறிவாலயத்திற்குத் தெரிவிக்கப்படவே, திமுகவின் 'கிச்சன் கேபினெட்' வட்டாரத்தில் கடுமையான கோபமும், அதிருப்தியும் உருவானதாகக் கட்சி விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இரண்டாம் நிலை நிர்வாகிகளின் மனப்பான்மை

    போராட்டங்களில் எதிர்பார்த்த கூட்டம் வராததற்கான காரணம் என்ன, உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து திமுக தொண்டர்கள் மற்றும் இரண்டாம் நிலை நிர்வாகிகளின் உண்மையான மனநிலை என்ன என்பதை அறிய சில மூத்த நிர்வாகிகளிடம் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    Advertisement

    அதில் முதன்மையானது, தலைவர்களின் பேச்சு மற்றும் பொதுமேடை நாகரிகம் குறித்த எச்சரிக்கை உணர்வு. "கட்சி கூட்டங்கள், போராட்டங்கள் அல்லது பொதுநிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும், ஆபாசமான அல்லது எல்லை மீறிய பேச்சுகளைத் தவிர்ப்பதுதான் அனைவருக்கும் நல்லது. செல்வாக்கு கொண்ட உதயநிதி ஸ்டாலினையே தவெக அரசு மற்றும் காவல்துறை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தி கைது செய்துள்ள நிலையில், சாதாரண தொண்டர்களும் இரண்டாம் நிலை நிர்வாகிகளும் எம்மாத்திரம்?" என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இந்த கைது நடவடிக்கை, மேடைகளில் பேசும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளதாக அவர்கள் உணர்கிறார்கள்.

    Advertisement

    தொண்டர்களின் மனக்கசப்பும், எதிர்கால நம்பிக்கையும்

    கடந்த காலங்களில் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் எதிர்கொண்ட புறக்கணிப்புகளே தற்போதைய மந்தமான நிலைக்கு முக்கியக் காரணம் என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. திமுக ஆட்சியில் இருந்தபோது, அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களைச் சரிவரக் கண்டுகொள்ளவில்லை என்றும், இதனால் ஏற்பட்ட அதிருப்தியே தேர்தல் சமயத்தில் மாற்று சக்திகளுக்கு ஆதரவாக சிலர் திரும்பக் காரணம் என்றும் நிர்வாகிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

    கட்சித் தலைமைக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கிலேயே பல தொண்டர்கள் ஒதுங்கியிருந்தனர்.

    தேர்தல் முடிந்த பின்னரும் கூட தொண்டர்களின் எதிர்பார்ப்புகளை தலைமை பூர்த்தி செய்யவில்லை என்பதால், பெரும்பாலானோர் தங்கள் அன்றாட வேலைகளை மட்டும் பார்த்துக்கொண்டு அமைதி காத்து வந்தனர்.

    Advertisement

    இருப்பினும், திமுகவின் எதிர்காலத் தூணாகத் தாங்கள் நம்பும் உதயநிதி ஸ்டாலின் மீது எடுக்கப்பட்ட இந்த அதிரடி கைது நடவடிக்கையைத் தொண்டர்களால் முற்றிலும் சகித்துக் கொள்ள முடியவில்லை என்றும், இது கட்சி அமைப்பில் மீண்டும் ஒரு புதிய வீச்சை ஏற்படுத்தும் என்றும் நிர்வாகிகள் உறுதியாக நம்புகின்றனர். அதாவது துவண்டு போய் இருந்த நிர்வாகிகளுக்கு இந்த கைது ஒரு பூஸ்ட் கொடுத்துள்ளதாக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Udhayanidhi Stalin Arrest: DMK Cadres Reaction, Kitchen Cabinet Dissatisfaction