இடைத்தேர்தல்.. 6 தொகுதியிலும் ஜெயிக்கனும்.. விஜய்க்கு செக் வச்சிடலாம்.. உதயநிதி போடும் ஸ்கெட்ச்!

  • சென்னை: சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த தவெக, அடுத்த கட்டமாக இடைத்தேர்தலை சந்திக்கவும் ஆயத்தமாகி வருகிறது. 6 தொகுதிகளையும் ஸ்வீப் செய்ய வேண்டும் என்பதில் தவெக வியூகம் வகுத்து வரும் நிலையில், இடைத்தேர்தலில் விஜய் பிம்பத்தை உடைத்து, திமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதில் உதயநிதி ஸ்டாலின் உறுதியாக உள்ளாராம். இதற்காக இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளை உள்ளடக்கிய திமுக மாவட்ட செயலாளர்களிடம் உதயநிதி ஆலோசித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    Advertisement

    அம்பாசத்திரம், மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்ற எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், எஸ் ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தவெகவில் இணைந்தனர். விராலி மலை தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் எந்த கட்சியில் இணைவார் என்று தெரியவில்லை. இவரும் தவெகவில் இணையலாம் என்று கூறப்படுகிறது.

    Advertisement

    உதயநிதி வகுக்கும் வியூகம்

    இந்த 5 தொகுதிகள் மற்றும் விஜய் போட்டியிட்டு ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு என 6 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையமும் தொடங்கிவிட்டது. இந்த ஆறு தொகுதிகளிலும் ஆளும் கட்சியான தவெக கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது. அதேநேரத்தில், திமுக, அதிமுக கட்சிகளும் இடைத்தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க ஆரம்பித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

    இந்த சூழலில்தான், திமுக இளைஞரணி தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின், தவெகவை இடைத்தேர்தலில் வீழ்த்தி, விஜய் பிம்பத்தை உடைக்க வியூகம் வகுத்து வருவதாக பேச்சு அடிபடுகிறது. இதற்காக இடைத்தேர்தல் வரக்கூடிய தொகுதிகளின் மாவட்ட செயலாளர்களை அழைத்து பேசிய உதயநிதி ஸ்டாலின், சில ஆலோசனைகளை வழங்கினாராம்.

    Advertisement

    விஜய் பிம்பத்தை உடைத்தால்..

    இன்ஸ்டால ரீல்ஸ் போட்டுத்தான் ஆட்சியையே பிடிச்சிருக்காங்க.. மீண்டும் தேர்தலை வைத்தால் பத்து தொகுதியில் கூட தவெக வெற்றி பெறுவது கடினம். பொய் பிம்பத்தில் இந்த ஆட்சி ஓடிக்கொண்டு இருக்கிறது. விஜய் பிம்பத்தை உடைத்தால் தவெக முகத்திரை கிழிந்துவிடும். ஆறு தொகுதி இடைத்தேர்தலிலும் தவெக தோல்வி அடைய வேண்டும். அதன் மூலம், அந்த கட்சிக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பது நிரூபணம் ஆகிவிடும். இதனால், இடைத்தேர்தலில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும் என்று கூறியாதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.

    வெற்றி கட்டாயத்தில் அதிமுக

    இன்னொரு பக்கம் ஏற்கனவே, ஆறு தொகுதிகளும் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள் என்பதால், அக்கட்சியும் போட்டியிட்டு கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் உள்ளது. அதே நேரத்தில் ஏற்கனவே தொடர் தோல்விகளால், அதிமுகவிற்குள் உள்கட்சி பூசல் அதிகரித்துள்ள நிலையில், இடைத்தேர்தலிலும் வாஷ் அவுட் ஆனால், எடப்பாடிக்கு எதிரான கலகக்குரல்கள் மேலும் வெடிக்கலாம் என்பது பற்றியும் அதிமுக தலைமை யோசிப்பதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    மீண்டும் வெல்லும் முனைப்பில் தவெக

    இன்னொரு பக்கம், ஆளும் கட்சியான தவெகவும் 6-இலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. தற்போது 108 எம்.எல்.ஏக்களை கொண்ட தவெகவின் பலம் 113 ஆக உயரும். இதனால், பெரும்பான்மைக்கு பிற கட்சிகளை சார்ந்து இருப்பதை தவிர்க்க முடியும். அதாவது, காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தாலே 119 எண்ணிக்கை வந்துவிடும். எனவே, ஆட்சிக்கு இருக்கும் நெருக்கடியை சமாளித்து, மக்கள் செல்வாக்கை இழக்கவில்லை எனக்காட்ட தவெகவும் வியூகம் வகுத்து வருகிறது. இதனால், விரைவில் வர இருக்கும் 6 தொகுதி இடைத்தேர்தல் களம் பொதுத்தேர்தலுக்கான பரபரப்புடன் காணப்படும் என்று தெரிகிறது.

    English Summary

    Udhayanidhi Stalin: While TVK is strategizing to sweep all six constituencies, Udhayanidhi Stalin is reportedly determined to shatter Vijay's image and secure a victory for the DMK in the by-election. It is said that he has held consultations with the DMK district secretaries overseeing the constituencies where the by-election is set to take place.